தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அக்டோபர் 6-ல் வாக்குப்பதிவு
அறிவிப்பின்படி, அக்டோபர் 6, 2026 அன்று மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பு மனு தாக்கல் எப்போது?
இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செப்டம்பர் 9-ம் தேதி தொடங்குகிறது. செப்டம்பர் 16-ம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.
அதன்பின்னர் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியான வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.
2 தொகுதிகளில் மட்டும் தேர்தல் ஏன்?
தமிழ்நாட்டில் தற்போது மொத்தம் 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ளன. ஆனால், அந்த 7 தொகுதிகளில் 2 தொகுதிகளுக்கு மட்டுமே தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கு தடைகள் இருப்பதால், அவற்றுக்கான தேர்தல் தேதி தற்போது அறிவிக்கப்படவில்லை.
இதனால் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் தமிழக அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

