விளம்பரம்:

வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி: 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!

Onions

வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி: 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில், விலையைக் கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடந்த 10 நாள்களில் 17 நகரங்களுக்கு சுமார் 4,000 டன் வெங்காயம் அரசு கையிருப்பில் இருந்து விநியோகிக்கப்பட்டுள்ளது.

1.21 லட்சம் டன் வெங்காயம் கையிருப்பு

2026ஆம் ஆண்டுக்காக மத்திய அரசிடம் தேசிய கூட்டுறவு நுகர்வோர் சங்கம் (NCCF), இந்திய தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு (NAFED) ஆகியவற்றின் மூலம் சுமார் 1.21 லட்சம் டன் வெங்காயம் கையிருப்பில் உள்ளது.

விளம்பரம்:

வெங்காய விலை அதிகமாக உள்ள நகரங்களுக்கு, உற்பத்தி மாநிலங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள இந்த கையிருப்பு வெங்காயம் படிப்படியாக அனுப்பப்பட்டு வருகிறது.

சென்னை உள்ளிட்ட 17 நகரங்களுக்கு விநியோகம்

வெங்காயத்தை அதிகளவில் தேவைப்படும் சந்தைகளுக்கு கொண்டு செல்ல லாரிகளுடன் சிறப்பு சரக்கு ரயில் சேவையும் பயன்படுத்தப்படுகிறது. ‘கந்தா எக்ஸ்பிரஸ்’ எனப்படும் சிறப்பு ரயில் சேவை மூலம் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு வெங்காயம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதுவரை 17 நகரங்களில் சுமார் 4,000 டன் அரசு கையிருப்பு வெங்காயம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மத்திய நுகர்வோர் விவகாரத் துறை செயலர் நிதி கரே தெரிவித்துள்ளார்.

விளம்பரம்:

சென்னை மற்றும் தில்லிக்கு அதிக அளவில் வெங்காயம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அடுத்தகட்டமாக குவாஹாட்டிக்கு வெங்காயம் அனுப்பப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிலோ ₹35-க்கு வெங்காயம்

வெங்காய விலை அதிகமாக உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில், மத்திய அரசின் கையிருப்பில் இருந்து ஒரு கிலோ வெங்காயம் ₹35 என்ற மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இதன் மூலம் சந்தையில் வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதுடன், நுகர்வோருக்கு குறைந்த விலையில் வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்ய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

வெங்காய விலையில் சிறிய அளவு குறைவு

அரசின் கையிருப்பு வெங்காயத்தை சந்தையில் விநியோகித்ததன் மூலம் நுகர்வோருக்கு ஓரளவு நிவாரணம் கிடைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சில பகுதிகளில் வெங்காய விலையில் சிறிய அளவில் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், மத்திய அரசின் கையிருப்பில் உள்ள வெங்காயத்தின் அளவும் தரமும் தனியார் வியாபாரிகள் விற்பனை செய்யும் வெங்காயத்துக்கு இணையாகவே இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் கையிருப்பு வெங்காயத்தை கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்ய மாநில அரசுகளும் ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெங்காய விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், அரசு கையிருப்பில் உள்ள வெங்காயத்தை சந்தைக்கு கொண்டு வருவதன் மூலம் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

விளம்பரம்:

உங்கள் கருத்து?

Related Posts