Kamal Haasan Letter to CM Vijay: தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் கிராம சபைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், முதலமைச்சர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளார். அக்டோபர் 2-ம் தேதி நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டங்களை முன்னிட்டு அவர் இந்த ஆலோசனைகளை முன்வைத்துள்ளார்.
பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கு மதிப்பூதியம் உயர்த்த கோரிக்கை
கிராம ஊராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களின் பணிச்சுமை மற்றும் பொறுப்புகளை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியத்தை கணிசமாக உயர்த்த வேண்டும் என கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
அதன்படி, கிராம ஊராட்சி தலைவர்களுக்கு மாதம் ரூ.16,000, துணைத் தலைவர்களுக்கு ரூ.10,000, வார்டு உறுப்பினர்களுக்கு ரூ.8,000 வழங்க வேண்டும் என அவர் பரிந்துரைத்துள்ளார்.
டாஸ்மாக் கடைகளுக்கு கிராம சபை ஒப்புதல்
கிராமங்களில் புதிய டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு முன்பு சம்பந்தப்பட்ட கிராம சபையின் ஒப்புதலை பெற வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும், ஏற்கனவே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைக்கு எதிராக கிராம சபை உறுதியான தீர்மானம் நிறைவேற்றினால், அந்தக் கடையின் செயல்பாட்டை தடுக்கக்கூடிய நடைமுறையை அரசு உருவாக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
கிராம சபைகளில் மக்கள் பங்கேற்பு அதிகரிக்க வேண்டும்
கிராம சபைகளின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், சிறப்பாக செயல்படும் கிராம சபைக் கூட்டங்களை அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்புடன் நேரலையாக ஒளிபரப்பலாம் என்றும் கமல்ஹாசன் யோசனை தெரிவித்துள்ளார்.
தீர்மானங்களுக்கு காலக்கெடுவுடன் நடவடிக்கை
கிராம சபைகளில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் வெறும் பதிவுகளாக இல்லாமல், அவற்றின் மீது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை பொதுமக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
கிராம வளர்ச்சியில் மக்களுக்கு முக்கிய பங்கு
நீர், சுகாதாரம், சாலைகள், கல்வி, வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட உள்ளூர் தேவைகளை மக்கள் தாங்களே அடையாளம் கண்டு, கிராம வளர்ச்சித் திட்டங்களை உருவாக்குவதில் நேரடியாக பங்கேற்கும் வகையில் கிராம சபைகள் செயல்பட வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
வரும் அக்டோபர் 2, 2026 கிராம சபைக் கூட்டங்களை பயன்படுத்தி, தமிழ்நாடு முழுவதும் கிராம சபைகளின் செயல்பாட்டை மேலும் வலுப்படுத்தும் விரிவான நடவடிக்கைகளை அரசு தொடங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

