உலக நாடுகள் மற்றும் கண்டங்களின் உண்மையான நிலப்பரப்பு அளவை மிகவும் துல்லியமாக பிரதிபலிக்கும் வகையில் உலக வரைபடங்களை மாற்றுவதற்கான ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவாக வாக்களித்துள்ளது. இந்த தீர்மானம் 164 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
‘Equal Earth’ வரைபடம்
தற்போது பரவலாக பயன்படுத்தப்படும் மெர்கேட்டர் வரைபடத்தில் துருவப் பகுதிகளுக்கு அருகிலுள்ள நிலப்பரப்புகள் உண்மையான அளவை விட பெரிதாகத் தோன்றுகின்றன. இதனால் ஆப்பிரிக்கா போன்ற பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள கண்டங்கள் ஒப்பீட்டளவில் சிறியதாகக் காட்சியளிக்கின்றன.
இதற்கு மாற்றாக, கண்டங்களின் பரப்பளவை ஒப்பீட்டளவில் துல்லியமாகக் காட்டும் ‘Equal Earth’ வரைபட முறையைப் பயன்படுத்த வேண்டும் என புதிய தீர்மானம் வலியுறுத்துகிறது.
ஆப்பிரிக்காவின் உண்மையான அளவு பிரதிபலிப்பு
புதிய வரைபடத்தில் ஆப்பிரிக்காவின் பரப்பளவு முந்தைய மெர்கேட்டர் வரைபடத்தை விட மிகவும் சரியான விகிதத்தில் காணப்படும். இதன் மூலம் உலகின் பல்வேறு பகுதிகளின் புவியியல் அளவை மக்கள் சரியாகப் புரிந்துகொள்ள முடியும் என ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
164 நாடுகள் ஆதரவு
193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொதுச்சபையில் 164 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. 6 நாடுகள் வாக்களிப்பில் நடுநிலை வகித்த நிலையில், அமெரிக்கா மட்டும் எதிராக வாக்களித்தது.
கட்டாயமாக்கப்படாத தீர்மானம்
இந்த தீர்மானம் சட்டரீதியாக கட்டாயப்படுத்தக்கூடியது அல்ல. இருப்பினும், கல்வி, புவியியல் அறிவு, ஊடகம் மற்றும் டிஜிட்டல் தளங்களில் உலக வரைபடங்களை உருவாக்கும்போது நிலப்பரப்புகளின் உண்மையான அளவை பிரதிபலிக்கும் முறைகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும்.

