காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் பாசனத் தேவையை கருத்தில் கொண்டு, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கல்லணையில் இருந்து நாளை (செப்டம்பர் 6) காலை 11 மணிக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்
கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு மற்றும் கல்லணை கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் சுமார் 16 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டூரில் இருந்து வந்த காவிரி நீர்
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து செப்டம்பர் 1-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. முதற்கட்டமாக வினாடிக்கு 7,000 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், அந்த நீர் முக்கொம்பு மேலணையை வந்தடைந்தது. தொடர்ந்து கல்லணையை நோக்கி காவிரி நீர் வந்து கொண்டிருக்கிறது.
சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரம்
கல்லணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவதால், டெல்டா மாவட்டங்களில் விவசாயப் பணிகள் மேலும் வேகம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட காலமாக தண்ணீரை எதிர்பார்த்து வந்த விவசாயிகளுக்கு இந்த அறிவிப்பு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

