இரண்டாகப் பிளந்த சிஜேபி: புதிய கட்சியை அறிவித்த மனிஷ் பிரம்மபத்!

இரண்டாகப் பிளந்த சிஜேபி: புதிய கட்சியை அறிவித்த மனிஷ் பிரம்மபத்

தில்லி: கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் (CJP) ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து, அக்கட்சியில் இருந்து விலகிய சமூக ஆர்வலர் மனிஷ் பிரம்மபத், ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி – ஜனநாயகம்’ (CJP-D) என்ற புதிய கட்சியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார்.

தில்லி ஜந்தர் மந்தரில் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நடத்திய போராட்டத்தில் மனிஷ் பிரம்மபத் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார்.

விளம்பரம்:

இதற்கிடையே, நாடு முழுவதும் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் புதிய ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நிர்வாகக் குழுவை கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே கடந்த மாதம் அறிவித்திருந்தார்.

இந்த நிர்வாகக் குழுவில் ஜந்தர் மந்தர் போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என மனிஷ் பிரம்மபத் உள்ளிட்டோர் குற்றம்சாட்டினர். இதையடுத்து, அபிஜீத் தீப்கேவின் இல்லத்துக்கு வெளியே மனிஷ் பிரம்மபத், ராகுல் பாண்டியா உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், சிஜேபியின் புதிய தேசிய செயற்குழு, ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலுடன் இணக்கமாகச் செயல்படும் குழுவாக மாறிவிட்டதாகவும் மனிஷ் பிரம்மபத் ஏற்கெனவே குற்றம்சாட்டியிருந்தார்.

விளம்பரம்:

புதிய கட்சி தொடக்கம்

இந்த நிலையில், ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி – ஜனநாயகம்’ என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்குவதாக மனிஷ் பிரம்மபத் வியாழக்கிழமை அறிவித்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட விடியோவில், இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட நாடு தழுவிய இயக்கத்தை அரவிந்த் கேஜரிவால் தன்வசப்படுத்த முயற்சிப்பதாகவும், தனது அரசியல் நோக்கங்களுக்கு ஏற்ப செயல்படுவதற்காக அபிஜீத் தீப்கேவுடன் அவர் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

இதன் காரணமாக சிஜேபி நிர்வாகக் குழுவில் ஆம் ஆத்மி கட்சியினருக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், பெண்கள், இஸ்லாமியர்கள் மற்றும் சீக்கியர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்றும் மனிஷ் பிரம்மபத் குற்றம்சாட்டினார்.

சிஜேபி நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்ற நிலையில், ஜார்க்கண்ட் போராட்டத்தில் மட்டும் பங்கேற்கவில்லை என்றும் அவர் தனது விடியோவில் குறிப்பிட்டுள்ளார். இதற்குப் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

சிஜேபி-டியில் இணைய அழைப்பு

தனது புதிய இயக்கம் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும் எனத் தெரிவித்த மனிஷ் பிரம்மபத், வாட்ஸ்ஆப் குழு, இணையதளம் மற்றும் மிஸ்டு கால் வாயிலாக சிஜேபி-டி கட்சியில் இணையலாம் என அழைப்பு விடுத்துள்ளார்.

சமூக ஆர்வலரான மனிஷ் பிரம்மபத், குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்:

விளம்பரம்:

விளம்பரம்:

உங்கள் கருத்து?

Related Posts