தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த சில நிர்வாகிகள், கட்சியின் தலைவர் விஜய் எதிர்காலத்தில் பிரதமர் (Vijay as PM ) பதவிக்கு வர வேண்டும் என்ற தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சமீபத்தில் தவெக எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ், 2029-ம் ஆண்டு விஜய் பிரதமராக வருவார் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
Vijay as PM | விஜய் 2029-ல் பிரதமரா?
மேலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியே விஜய்யை பிரதமர் பதவியில் அமர வைப்பார் என்றும் அவர் கூறியிருந்தார். இந்தக் கருத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியது.
“இது எம்எல்ஏக்களின் தனிப்பட்ட கருத்து”
இந்நிலையில், தவெக நிர்வாகிகளின் இந்தப் பேச்சு குறித்து அக்கட்சியின் முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான வெங்கடரமணன் விளக்கம் அளித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய் பிரதமராக வேண்டும் என்று சில எம்எல்ஏக்கள் தெரிவிக்கும் கருத்துகள் கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்ல என்று கூறினார். ஒவ்வொரு எம்எல்ஏவும் தங்களுடைய தனிப்பட்ட கருத்துகளை வெளிப்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
கட்சியின் மேலிடம் முடிவு செய்யும்
முதல்வர், பொதுச்செயலாளர் மற்றும் அமைச்சர்கள் இதுபோன்ற கருத்துகளை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை என்றும் வெங்கடரமணன் குறிப்பிட்டார். அமைச்சர்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கும் முன்பு கட்சித் தலைமையிடம் ஆலோசனை செய்வதாகவும் அவர் கூறினார்.
“தொண்டர்களின் அன்பால் கூறுகின்றனர்”
விஜய்யை தேசிய அரசியலுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற விருப்பம் கட்சியினரிடம் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். விஜய் மீதான அதிகப்படியான அன்பு மற்றும் எதிர்பார்ப்பின் காரணமாகவே சிலர் அவர் பிரதமராக வேண்டும் என்று கூறுவதாகவும் அவர் விளக்கினார்.
2029-ல் முடிவு எடுக்கப்படும்
இந்த விவகாரம் குறித்து உடனடியாக எந்த முடிவும் எடுக்க வேண்டிய அவசியமில்லை என்றும் வெங்கடரமணன் கூறினார். 2029-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில், கட்சித் தலைவர் விஜய் தலைமையிலான குழு ஆலோசித்து தேசிய அரசியல் தொடர்பான முடிவை எடுக்கும் என அவர் தெரிவித்தார்.
இதனால், விஜய்யை 2029-ம் ஆண்டு பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்து தவெக நிர்வாகிகளிடையே தற்போது வெளியாகும் கருத்துகள் கட்சியின் அதிகாரப்பூர்வ முடிவு இல்லை என்பது தெளிவாகியுள்ளது.

