தமிழகத்திற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதல்வர் விஜய் (CM Vijay ) செப்டம்பர் 10ஆம் தேதி பிரிட்டனுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வராக பொறுப்பேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணமாக இது அமையலாம் என கூறப்படுகிறது.
முதலீடுகளை ஈர்க்க திட்டம்
உலகளவில் செமிகண்டக்டர் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த சிப் உற்பத்தித் துறைகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. இந்நிலையில், இந்த துறைகளில் செயல்பட்டு வரும் சர்வதேச நிறுவனங்களிடம் இருந்து தமிழகத்திற்கு முதலீடுகளை கொண்டு வர அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக செப்டம்பர் 4ஆம் தேதி தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான அதிகாரிகள் குழு தைவான் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. அங்கு நடைபெறும் செமிகான் மாநாட்டில் பங்கேற்று, முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பாக நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செப்.10 முதல் பிரிட்டனில் முதலீட்டாளர்களுடன் சந்திப்பு
இதைத்தொடர்ந்து, முதல்வர் விஜய் தலைமையிலான தொழில் துறை அதிகாரிகள் குழு செப்டம்பர் 10ஆம் தேதி பிரிட்டன் செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 16ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் பயணத்தில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் முதலீட்டாளர்களை நேரில் சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தென் மாநிலங்கள் இடையே புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் போட்டி அதிகரித்து வரும் நிலையில், வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வருவதற்கான முயற்சிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்பாக கடந்த மே மாதம் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா தென்கொரியா சென்றிருந்தார். அப்போது கப்பல் கட்டுமானத் துறையைச் சேர்ந்த முதலீட்டாளர்களுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
100 நாட்களில் ரூ.1 லட்சம் கோடிக்கும் மேல் முதலீடு?
தவெக அரசு பொறுப்பேற்ற முதல் 100 நாட்களுக்குள் சென்னையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டதாகவும், அதில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தங்கள் வாயிலாக ரூ.67,452 கோடி மதிப்பிலான முதலீடுகள் மற்றும் 1,06,998 பேருக்கான வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆட்சி அமைந்த முதல் 100 நாட்களில் பல்வேறு துறைகள் வாயிலாக மொத்தம் ரூ.1,02,514 கோடிக்கும் அதிகமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 1,21,788 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் தகவல் தெரிவிக்கிறது.
இந்த நிலையில், பிரிட்டன் பயணத்தின் மூலம் மேலும் பல சர்வதேச நிறுவனங்களிடம் இருந்து முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

