தமிழக அரசியலில் தவெக – காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. 2029 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்க தவெக மறுத்தால், TVK Allianceல் இருந்து வெளியேறுவது குறித்து காங்கிரஸ் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளதாக கூறப்படும் நிலையில், விஜய்யை தேசிய அளவில் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் பேச்சுகள் அக்கட்சியினரிடையே எழுந்துள்ளன. தமிழகத்தில் இருந்து எதிர்காலத்தில் பிரதமர் உருவாக வேண்டும் என்று தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் பேசியதைத் தொடர்ந்து, விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்ற கருத்துகள் அதிகரித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலைப்பாடு காங்கிரஸ் தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. தவெக தலைவர்கள் இன்னும் ரசிகர் மன்ற மனநிலையிலேயே இருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் விமர்சித்திருந்ததும் இதன் பின்னணியில் பார்க்கப்படுகிறது.
மேலும், 2029 மக்களவைத் தேர்தலில் பிரதமர் பதவிக்கான போட்டியில் விஜய்க்கு 9 சதவீத ஆதரவு இருப்பதாக தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவலும் காங்கிரஸ் மேலிடத்தில் கவனத்தை ஈர்த்துள்ளதாக தெரிகிறது.
ராகுல் காந்தியே பிரதமர் வேட்பாளர்
இந்த சூழலில், 2029 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என காங்கிரஸ் தரப்பில் இருந்து தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
தவெக இதனை ஏற்காவிட்டால், தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் அமைச்சர்கள் பதவியில் தொடர்வது குறித்தும் கேள்வி எழலாம் என அக்கட்சியைச் சேர்ந்த சிலர் தெரிவித்துள்ளனர். இதற்கு தவெக தரப்பில் இதுவரை வெளிப்படையான பதில் வெளியாகவில்லை.
இதற்கிடையே, திமுகவை விமர்சித்து வந்த காங்கிரஸ் தலைவர்கள் மீண்டும் திமுகவுடனான கடந்தகால அரசியல் ஒத்துழைப்பை சுட்டிக்காட்டி பேசத் தொடங்கியுள்ளனர். சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பர்ட், திமுகவும் காங்கிரஸும் இணைந்து பாஜகவுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தியதாக குறிப்பிட்டார்.
தனித்து போட்டியிட காங்கிரஸ் தயாரா?
தவெக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறும் நிலை ஏற்பட்டால், தமிழகத்தில் தனித்து தேர்தலை சந்திப்பதற்கான தயாரிப்புகளையும் அக்கட்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக கட்சியின் அமைப்பை அடிமட்ட அளவில் வலுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களை தீவிரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
விஜய்யை சந்தித்த காங்கிரஸ் தலைவர்கள்
கூட்டணி தொடர்பாக பல்வேறு கருத்துகள் வெளியாகி வரும் நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் மற்றும் எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் முதல்வர் விஜய்யை தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர்.
இந்த சந்திப்பின்போது, தவெக ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ் வழங்கிய ஆதரவு மற்றும் தற்போது ஆட்சியில் காங்கிரஸ் பங்கேற்று வருவது குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. அதேவேளையில், விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் தவெக நிர்வாகிகளின் பேச்சுகளால் தேசிய அளவில் கூட்டணிக்குள் சிக்கல் ஏற்படுவதாகவும், இந்த விவகாரத்துக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்றும் காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு விஜய், கட்சி நிர்வாகிகளுடன் இந்த விவகாரம் குறித்து ஆலோசிப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால், தவெக – காங்கிரஸ் கூட்டணி தொடருமா அல்லது அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப புதிய மாற்றம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் வட்டாரங்களில் அதிகரித்துள்ளது.

