சென்னையில் சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் ஆகியவை ஒரே வளாகத்தில் செயல்படும் வகையில், நவீன வசதிகளுடன் புதிய நிர்வாகக் கட்டடம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ் பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்த அவர், சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் இந்த புதிய கட்டட வளாகம் உருவாக்கப்படும் என தெரிவித்தார்.
புதிய தலைமைச் செயலகத்தில் அரசு நிர்வாகத்துக்குத் தேவையான நவீன கட்டமைப்புகள் இடம்பெறும். தீயணைப்பு பாதுகாப்பு வசதிகள், மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையிலான வசதிகள் மற்றும் பசுமைக் கட்டட தரநிலைகள் ஆகியவை கருத்தில் கொள்ளப்படும்.
மேலும், போதுமான வாகன நிறுத்துமிடங்கள், மாநாட்டு அரங்குகள், பொதுமக்களுக்கான சேவை மையங்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கான நவீன பணிச்சூழல் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன.
அனைத்து அரசுத் துறைகளையும் ஒரே நிர்வாக வளாகத்தின் கீழ் ஒருங்கிணைத்து செயல்படுத்தும் நோக்கத்துடன் இந்த புதிய தலைமைச் செயலகம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ‘தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம்’
இதனுடன், சென்னையில் உலகத்தரம் வாய்ந்த ‘தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம்’ அமைக்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் விஜய் அறிவித்தார்.
இந்த விளையாட்டு நகரத்தில் சர்வதேச தரத்திலான விளையாட்டு அரங்குகள், நவீன விளையாட்டு உபகரணங்கள், உயர்தர செயல்திறன் பயிற்சி மையம், விளையாட்டு அறிவியல் மற்றும் மருத்துவ மையங்கள் உள்ளிட்ட வசதிகள் உருவாக்கப்பட உள்ளன.
விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான தங்குமிட வசதிகளும் ஏற்படுத்தப்படும். சர்வதேச போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் அதிக பதக்கங்களை வெல்லும் வகையில், திறமையான வீரர்களை உருவாக்குவதற்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையமாக இது செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்
தமிழ்நாட்டில் தனியாக மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச தரத்திலான பந்தயத் தடம், பயிற்சி மையங்கள் மற்றும் அதற்குத் தேவையான நவீன உள்கட்டமைப்புகள் இங்கு ஏற்படுத்தப்படும். Formula 1, Formula 2, Formula 3, Formula 4 உள்ளிட்ட போட்டிகளை நடத்துவதற்கான வசதிகள் உருவாக்கப்பட உள்ளன.
இதன் மூலம் இளைஞர்களின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் திறமைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு பயிற்சி மற்றும் போட்டி வாய்ப்புகளை வழங்கி, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான வீரர்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், மோட்டார் ஸ்போர்ட்ஸ் தொடர்பான சுற்றுலா, வாகன உற்பத்தித் தொழில், வேலைவாய்ப்பு மற்றும் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் இந்தத் திட்டம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

