Temple Demolished பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நரோவால் மாவட்டத்தில் 125 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான இந்து கோவில் ஒன்று இடிக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தியா கடும் எதிர்ப்பு
இந்த விவகாரம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை சார்பில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பாகிஸ்தான் அரசுக்கு இருப்பதாக இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், கோவில் இடிக்கப்பட்டது தொடர்பாக விரைவான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
கோவில் இடிப்பு குறித்து மாறுபட்ட தகவல்கள்
நரோவால் மாவட்டம் சிராஜ் கிராமத்தில் அமைந்திருந்த இந்த கோவில் 1 125 ஆண்டுகள் பழமையானது என தகவல்கள் தெரிவிக்கின்றன. கோவில் திட்டமிட்டு இடிக்கப்பட்டதாக சிறுபான்மை அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ள நிலையில், பாகிஸ்தான் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள Evacuee Trust Property Board, கனமழை காரணமாக கட்டிடம் இடிந்து விழுந்ததாக தெரிவித்துள்ளது.
மறுகட்டுமானம் செய்ய கோரிக்கை
கோவில் இடிக்கப்பட்டதன் உண்மை காரணத்தை கண்டறிய விசாரணை நடத்த வேண்டும் என்றும்,கோவில் மீண்டும் அதே இடத்தில் கட்டப்பட வேண்டும் என்றும் சிறுபான்மை பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் பாகிஸ்தானில் சிறுபான்மை சமூகங்களின் மத வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது.

