மகளிர் ஆசிய கோப்பை: ஹாங்காங் அணியை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா!
துபாய்: 2026 மகளிர் டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹாங்காங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
சதம் விளாசிய ஸ்மிருதி மந்தனா
டாஸ் வென்ற ஹாங்காங் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்.
மந்தனா 64 பந்துகளில் 124 ரன்கள் விளாசினார். இதில் 14 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்கள் அடங்கும். அவரது அபாரமான ஆட்டத்தின் உதவியுடன் இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் எடுத்தது.
56 ரன்களில் சுருண்ட ஹாங்காங்
194 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய ஹாங்காங் அணியின் பேட்டர்கள், இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
ஹாங்காங் அணி 16.2 ஓவர்களில் 56 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் நடாஷா மைல்ஸ் 15 ரன்கள் எடுத்தார்.
பந்துவீச்சில் அசத்திய தீப்தி சர்மா
இந்திய பந்துவீச்சில் தீப்தி சர்மா சிறப்பாக செயல்பட்டு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்ரீ சரணி மற்றும் பிரேமா ராவத் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். நந்தினி சர்மாவும் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
இதன் மூலம் ஹாங்காங் அணியை 56 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா, 137 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.
அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
ஹாங்காங் அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் மகளிர் ஆசிய கோப்பை 2026 தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெற்ற முதல் அணியாக இந்தியா முன்னேறியது.

