Udhayanidhi Slams TVK: தமிழக சட்டப்பேரவையில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.
தமிழ்நாடு ரிவர்ஸ் கியரில்
திமுக ஆட்சிக் காலத்தில் வேகமாக முன்னேறிய தமிழ்நாடு, தவெக அரசு பொறுப்பேற்ற 116 நாட்களில் பின்னோக்கிச் செல்லும் நிலைக்கு வந்துவிட்டதாக உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
மேலும், தற்போதைய அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் சில குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய அவர், இதன் மூலம் திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருந்ததை ஆளுங்கட்சி ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
குற்றச்சம்பவங்கள் குறித்து குற்றச்சாட்டு
கடந்த 116 நாட்களில் கொலை, பாலியல் வன்கொடுமை மற்றும் ஆணவக்கொலை உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக உதயநிதி தெரிவித்தார். குறிப்பாக, சிறைகளில் ஏற்பட்ட மரணங்கள் தொடர்பாகவும் அவர் கேள்வி எழுப்பினார்.
சிறை மரணங்கள் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை என்றும், குறைந்தபட்சம் அரசின் வருத்தத்தைக் கூட தெரிவிக்கவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.
சட்டம் இருக்கிறது; ஒழுங்கு இல்லை
தவெக ஆட்சியில் சட்டம் இருப்பதாகவும், ஆனால் சட்டம்-ஒழுங்கு நிலை கேள்விக்குறியாக இருப்பதாகவும் உதயநிதி குற்றம்சாட்டினார்.
மேலும், கடந்த காலங்களில் குற்றச்சம்பவங்களுக்கு அரசின் செயல்பாடுகளே காரணம் என விமர்சித்தவர்கள், தற்போது தனிநபர்களை மட்டுமே பொறுப்பாக்குவதாகவும் அவர் கூறினார்.
பாஜக குறித்து கேள்வி
ஆளுங்கட்சியை விமர்சிக்கும் பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் என்றும் உதயநிதி கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சிகளிடம் ஒரு விதமாகவும், பாஜகவினரிடம் மற்றொரு விதமாகவும் ஆளுங்கட்சி அணுகுவதாக அவர் விமர்சித்தார்.
தேர்தல் வாக்குறுதிகள் குறித்த விமர்சனம்
தேர்தலின்போது அளிக்கப்பட்ட பல்வேறு வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றும் உதயநிதி குற்றம்சாட்டினார். அரசு அறிவிக்கும் திட்டங்கள் மக்களிடம் சென்றடைவதைவிட, சமூக வலைதளங்களில் வெளியாகும் காணொளிகள் அதிக கவனம் பெறுவதாக இருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.
நேரடியாக பதிலளிக்க வேண்டும்
சட்டப்பேரவையில் மக்கள் சார்பாக கேள்விகளை எழுப்ப வேண்டிய பொறுப்பு எதிர்க்கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்ட உதயநிதி, கேள்விகளுக்கு முதலமைச்சர் நேரடியாகவும் தெளிவாகவும் பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட சில திட்டங்கள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறி, அவற்றின் விவரங்களையும் தொடர்ந்து பட்டியலிட்டார்.

