தமிழ் திரையுலகில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் கவின், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த மகிழ்ச்சியான தகவலை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். நடிகர் கவின் மற்றும் மோனிகா டேவிட் தம்பதிக்கு சமீபத்தில் ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.
குழந்தைகளின் பெயர்களை அறிவித்த கவின்
குழந்தைகள் பிறந்த தகவலை ஏற்கனவே ரசிகர்களிடம் பகிர்ந்திருந்த கவின், தற்போது அவர்களுக்கு சூட்டப்பட்டுள்ள பெயர்களையும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். தனது சமூக வலைதளப் பதிவில், தியோலினா கவின் (Theolina Kavin) மற்றும் தியான் லியோ கவின் (Theon Leo Kavin) என குழந்தைகளின் பெயர்களை அறிவித்துள்ளார்.
கால்களுடன் வெளியான முதல் புகைப்படம்
குழந்தைகளின் முகத்தை வெளிப்படுத்தாமல், அவர்களின் சிறிய கால்கள் மட்டும் தெரியும் வகையில் புகைப்படத்தையும் கவின் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகிறது. குழந்தைகளின் பெயர்களை அறிவித்தபோது இறைவனுக்கு நன்றி தெரிவித்துள்ள கவின், தந்தையான மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இறைவனுக்கு நன்றி 🙏🏼
எங்கள் குழந்தைகளுக்கு தியோலினா கவின் என்றும், தியான் லியோ கவின் என்றும் பெயர் சூட்டியுள்ளோம்.
Theolina Kavin
Theon Leo Kavin🙂 ♥️ pic.twitter.com/5heRRiSKgz
— Kavin (@Kavin_m_0431) September 3, 2026
பெயர்களின் பின்னணி என்ன?
குழந்தைகள் இருவருக்கும் சூட்டப்பட்டுள்ள பெயர்களில் ‘தியோ’ என்ற சொல்லுக்கு கிரேக்க மொழியில் கடவுள் அல்லது இறைவனுடன் தொடர்புடைய அர்த்தம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தங்களது குழந்தைகள் இறைவனின் அருளைப் பெற்றவர்கள் என்ற பொருளை பிரதிபலிக்கும் வகையில் கவின் பெயர்களை தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது.
வெற்றிப் பாதையில் நடிகர் கவின்
சின்னத்திரையில் அறிமுகமாகி ரசிகர்களிடம் பிரபலமான கவின், பின்னர் வெள்ளித்திரையில் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார். ‘லிப்ட்’, ‘டாடா’, ‘ஸ்டார்’ உள்ளிட்ட படங்கள் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தன.
தொடர்ந்து மாறுபட்ட கதைக்களங்களில் நடித்து வரும் கவின், தற்போது நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் உள்ளார். இதையடுத்து அவரது அடுத்தடுத்த படங்கள் குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

