முதுமலை புலிகள் காப்பகத்தில் செல்போன் பயன்படுத்த தடை!
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தின் மைய வாழ்விட சுற்றுலா மண்டலங்களில் சுற்றுலா பயணிகள் செல்போன் பயன்படுத்த வனத்துறை தடை விதித்துள்ளது. வனவிலங்குகளுக்கு ஏற்படும் இடையூறுகளை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
செல்போன் பயன்பாட்டால் விலங்குகளுக்கு இடையூறு
முதுமலை புலிகள் காப்பகத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஜீப் சவாரி மூலம் வனவிலங்குகளை பார்வையிட வருகின்றனர். சவாரியின்போது செல்போன்களை அதிக ஒலியுடன் பயன்படுத்துவது வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தலையும் தொந்தரவையும் ஏற்படுத்துவதாக வனத்துறை தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி நடவடிக்கை
முதுமலை வனச்சரகர் யுவராஜா தெரிவித்ததன்படி, உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி மைய வாழ்விட சுற்றுலா மண்டலங்களில் செல்போன் பயன்பாட்டுக்கு இன்று முதல் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஜீப் சவாரிக்கு செல்லும் பார்வையாளர்கள் தங்களது செல்போன்களை சவாரி வாகனங்களில் பாதுகாப்பாக ஒப்படைக்கலாம். சவாரி முடிந்ததும் செல்போன்களை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளிடம் வனத்துறை வேண்டுகோள்
வனவிலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு சுற்றுலா பயணிகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என வனத்துறை தெரிவித்துள்ளது.
முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு வனவிலங்குகளுடன் சுமார் 260 வகையான பறவையினங்களும் காணப்படுகின்றன.

