தமிழ்நாடு சட்டப்பேரவையில் சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ், மக்கள் நல்வாழ்வை மேம்படுத்தும் வகையில் உப்பு பயன்பாட்டைக் குறைக்கும் மாநில அளவிலான இயக்கம் மற்றும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் புதிய அறிவியல் ஆய்வு திட்டம் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
நோய் ஏற்பட்ட பிறகு சிகிச்சை அளிப்பதைவிட, நோய் வருவதற்கு முன்பே தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.
உப்பு பயன்பாட்டைக் குறைக்க மாநில அளவிலான இயக்கம்
தமிழகத்தில் உயர் ரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம் உள்ளிட்ட தொற்றா நோய்கள் முக்கிய சுகாதாரப் பிரச்சினையாக உள்ளன. மாநிலத்தில் சுமார் 1.80 கோடி பேர் உயர் ரத்த அழுத்தத்துடன் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மருத்துவ ரீதியாக உறுதிசெய்யப்பட்ட இறப்புகளில் சுமார் 50 சதவீதம் இதயம் மற்றும் ரத்தக் குழாய் நோய்களால் ஏற்படுகின்றன.
உலக சுகாதார நிறுவனம் ஒருவர் தினமும் 5 கிராமுக்கும் குறைவாக உப்பு எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கிறது. ஆனால் தமிழகத்தில் சராசரியாக தினமும் 7 முதல் 8 கிராம் வரை உப்பு உட்கொள்ளப்படுவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மேலும், தென்னிந்திய உணவு முறையில் உட்கொள்ளப்படும் உப்பில் சுமார் 88 சதவீதம் வீட்டு சமையலில் சேர்க்கப்படும் உப்பாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
ஒரு கிராம் உப்பைக் குறைத்தால் என்ன பயன்?
தினசரி உணவில் ஒரு கிராம் உப்பைக் குறைப்பதன் மூலம் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதுடன், இதய நோய் இறப்புகளை 7 சதவீதமும், பக்கவாத இறப்புகளை 10 சதவீதமும் குறைக்க முடியும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சோடியம் குறைவான மாற்று உப்பைப் பயன்படுத்திய 21 ஆயிரம் பேரை உள்ளடக்கிய சர்வதேச ஆய்வில், பக்கவாத பாதிப்பு 14 சதவீதமும், ஒட்டுமொத்த இறப்பு 12 சதவீதமும் குறைந்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசின் முக்கிய நடவடிக்கைகள்
மாநிலத்தில் உப்பு பயன்பாட்டின் தற்போதைய அளவை அறிய சிறுநீர் மாதிரி அடிப்படையிலான கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
அரசு உணவகங்கள் மற்றும் சமையலறைகளில் படிப்படியாக உப்பின் அளவைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். குறைந்த சோடியம் கொண்ட மாற்று உப்பை பொதுமக்களிடம் கொண்டு செல்வதற்கான முன்னோட்டத் திட்டமும் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், ஊறுகாய், அப்பளம், கருவாடு உள்ளிட்ட உணவுகளில் மறைந்திருக்கும் அதிகப்படியான உப்பு குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்
டெங்குவை கட்டுப்படுத்த ரூ.43 லட்சம் ஆய்வு
தமிழகத்தில் டெங்கு தடுப்புக்காகவும் புதிய அறிவியல் ஆய்வு திட்டம் தொடங்கப்பட உள்ளது.
கடந்த 2025-ம் ஆண்டு 25,580 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு 12 பேர் உயிரிழந்தனர். 2026-ம் ஆண்டில் இதுவரை 14,581 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 9 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது.
டெங்கு பரப்பும் ஏடிஸ் கொசுக்களிடமிருந்து கூடுதல் பாதுகாப்பு பெறுவதற்கான வழிமுறைகளை கண்டறிய தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் குழும சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மொத்தம் ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற உள்ள இந்த ஆய்வில் சுமார் 2,880 வீடுகள் பங்கேற்க உள்ளன
மக்கள் ஒத்துழைப்பு அவசியம்
டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் அரசின் முயற்சிகளுடன் பொதுமக்களின் பங்களிப்பும் முக்கியம் என சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது. வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வதன் மூலம் கொசு பெருக்கத்தை கட்டுப்படுத்தி டெங்கு பரவலைத் தடுக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

