ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கம்பத்தில் மோதிய இண்டிகோ விமானம்; பயணிகள் பத்திரமாக வெளியேற்றம்!
ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்துமிடத்துக்குச் சென்ற இண்டிகோ விமானம் உலோகக் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பை விமான நிலையத்திலிருந்து ஸ்ரீநகருக்கு இண்டிகோ விமானம் 6E 225 வெள்ளிக்கிழமை காலை இயக்கப்பட்டது.
ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம், 6-வது நிறுத்துமிடத்தை நோக்கிச் சென்றபோது அங்கு இருந்த உலோகக் கம்பத்தின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றம்
இந்தச் சம்பவத்தில் விமான ஊழியர்கள், பயணிகள் என யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விமானத்தின் படிக்கட்டுகள் திறக்கப்படாததால், விமான நிலையத்தில் இருந்த தனிப் படிக்கட்டுகள் மூலம் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
விபத்து குறித்து விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் இண்டிகோ தெரிவித்துள்ளது.
விமான சேவை தற்காலிகமாக நிறுத்தம்
விபத்தில் சிக்கிய விமானம் பராமரிப்புப் பணிகளுக்காக தற்காலிகமாக சேவையிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளது. உரிய அனுமதிகள் பெறப்பட்ட பின்னர் விமானம் மீண்டும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்தில் மற்ற விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு வழக்கம்போல் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

