அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம், செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் இந்தத் திட்டத்தை அறிவித்தது. ஜூன் 22-ம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதி பெற்றுள்ளனர். 22 கேரட் தங்கத்தில் ஒரு கிராம் எடையிலான மோதிரம் வழங்கப்பட உள்ளது.
ரூ.755 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு
திட்டத்தை செயல்படுத்த அடுத்த ஓராண்டுக்கு ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 4,41,667 தங்க மோதிரங்கள் தயாரிக்க ஆர்டர் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோதிரங்களை தயாரித்து வழங்கும் பணியில் இரண்டு நிறுவனங்கள் ஒப்பந்தம் பெற்றுள்ளன. இதில் ஒரு நிறுவனம் 70 சதவீதமும், மற்றொரு நிறுவனம் 30 சதவீதமும் பணியை மேற்கொள்கின்றன.
செப்டம்பர் 15-ல் தொடங்குமா?
அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ம் தேதி இத்திட்டத்தை தொடங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த தேதியில் தொடங்குவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் லண்டன் பயணம் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் செப்டம்பர் 10-ம் தேதி லண்டன் செல்லும் அவர், செப்டம்பர் 16-ம் தேதி சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் செப்டம்பர் 15-ம் தேதி திட்டத்தை நேரடியாக தொடங்கி வைப்பது சாத்தியமற்ற சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உசிலம்பட்டியில் செப்.25-ல் தொடக்கம்?
இந்த நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் செப்டம்பர் 25-ம் தேதி தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ‘தாய்மாமன் சீர்’ வழங்கும் பாரம்பரியம் குறிப்பிடத்தக்க அளவில் இருப்பதால், தொடக்க நிகழ்ச்சிக்காக அந்தப் பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
காலை உணவுத் திட்டமும் விரிவாக்கம்
இதற்கிடையில், செப்டம்பர் 17-ம் தேதி விருதுநகரில் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்க நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காமராஜர் படித்த பள்ளியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக, மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியிலும் முதலமைச்சர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, வெளிநாட்டுப் பயணத்துக்குப் பிறகு முதலமைச்சரின் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளை கருத்தில் கொண்டு, தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க தேதி மாற்றப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

