Bank Strike: நாடு முழுவதும் வங்கி ஊழியர் சங்கங்கள் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால், தொடர்ந்து 4 நாட்களுக்கு வங்கி சேவைகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
வெள்ளி முதல் திங்கள் வரை பாதிப்பு
வங்கி ஊழியர்களுக்கு வாரந்தோறும் சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் விடுமுறை வழங்க வேண்டும், ஊழியர்களிடையே காட்டப்படும் பாரபட்சமான நடவடிக்கைகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
இன்றைய வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை நாட்களாகும். மேலும், திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி விடுமுறை என்பதால், வெள்ளிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகளின் நேரடி சேவைகள் பாதிக்கப்பட உள்ளன.
ஆன்லைன் சேவைகள் வழக்கம்போல் இயங்கும்
வங்கிக் கிளைகளில் பணம் செலுத்துதல், பணம் எடுத்தல் உள்ளிட்ட நேரடி சேவைகள் பாதிக்கப்படலாம். அதேநேரத்தில் இணையவழி வங்கி சேவைகள், மொபைல் பேங்கிங் மற்றும் ஏ.டி.எம். போன்ற சில சேவைகள் வழக்கம்போல் செயல்பட வாய்ப்புள்ளது.
மீண்டும் 3 நாள் வேலைநிறுத்தம்
இதனிடையே, வங்கி ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 28-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை 3 நாட்கள் தொடர் வேலைநிறுத்தமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வங்கி தொடர்பான அவசரப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய வாடிக்கையாளர்கள், முடிந்தவரை முன்கூட்டியே தங்களது பணிகளை திட்டமிடுவது நல்லது.

