சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலக வளாகம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ள நிலையில், இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த 12 மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
25 ஏக்கரில் புதிய தலைமைச் செயலகம்
பட்டினப்பாக்கத்தில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் புதிய தலைமைச் செயலக வளாகத்தை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் மீனவர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், பாரம்பரியமாக கடலை நம்பி வாழும் மீனவ மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என மீனவர் அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.
கடற்கரைப் பகுதி என்பதால் எதிர்ப்பு
புதிய கட்டுமானத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள பகுதி கடற்கரையை ஒட்டியுள்ளதுடன், ஆமைகள் முட்டையிடும் பகுதியாகவும் இருப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற ஆமை முட்டையிடும் பகுதிகளில் கட்டுமானப் பணிகள் தொடர்பாக நீதிமன்ற உத்தரவுகள் இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், தலைமைச் செயலகம் அமைக்கப்பட உள்ள நிலம் பாரம்பரியமாக மீனவ சமூகத்துடன் தொடர்புடையதாக இருந்ததாகவும், அந்த நிலத்தில் மீனவர்களுக்கு வீடுகள் அமைத்து தர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
மீன்பிடித் தொழிலுக்கு பாதிப்பு?
புதிய தலைமைச் செயலகத்தைச் சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தடுப்புகள் அமைக்கப்பட்டால், மீனவர்கள் கடலுக்குச் சென்று திரும்புவதில் கட்டுப்பாடுகள் ஏற்படலாம் எனவும் மீனவர் பிரதிநிதிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
முல்லிக்குப்பம், முல்லிமாங்கர்குப்பம், பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம், ராஜீவ் காந்தி நகர், பவானி குப்பம், இருதயபுரம், செல்வராஜபுரம், டூமிங் குப்பம், நொச்சிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகள் திட்டத்தால் பாதிக்கப்படக்கூடும் என கூறப்படுகிறது.
முல்லிக்குப்பம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டும் 1,500-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படகுகளை நிறுத்துதல், மீன்பிடி வலைகளை பழுது பார்த்தல் மற்றும் உலர்த்துதல் உள்ளிட்ட பணிகளுக்கு தற்போது பயன்படுத்தப்படும் கடற்கரை நிலம் பாதிக்கப்படும் என அவர்கள் கூறுகின்றனர்.
செப்டம்பர் 15-ல் ஆலோசனைக் கூட்டம்
பாரம்பரிய நிலத்தில் வீடுகள் அமைத்துத் தர வேண்டும் என 2023-ம் ஆண்டு முதல் கோரிக்கை விடுத்து வருவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். தேர்தலுக்கு முன்பு வழங்கப்பட்டதாக கூறப்படும் சில உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதற்கிடையே, 12 மீனவ கிராமங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் வரும் செப்டம்பர் 15-ம் தேதி பட்டினப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. இதில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்பட உள்ளதாக மீனவர் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

