மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை கட்சித் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
தவெக வேட்பாளர்கள் யார்?
மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் சத்யபாமாவும் தவெக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இருவரும் சமீபத்தில் தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆவர்.
மதுராந்தகம் தொகுதிக்கான தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மரகதம் குமரவேல், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பிலும் உள்ளார். தாராபுரம் வேட்பாளர் சத்யபாமா, திருப்பூர் தென்கிழக்கு மாவட்ட தவெக செயலாளராக உள்ளார்.
திமுக வேட்பாளர்களும் களத்தில்
இந்த இரு தொகுதிகளிலும் திமுக ஏற்கனவே தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மதுராந்தகம் தொகுதியில் பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் சுகன்யாவும் திமுக சார்பில் போட்டியிடுகின்றனர்.
மதுராந்தகம் தொகுதி வேட்பாளர் பரந்தாமன், திமுக சட்டத்துறையின் மாநில இணைச் செயலாளராக உள்ளார். பி.ஏ., பி.எல். படித்துள்ள இவர், தொலைக்காட்சி விவாதங்களிலும் திமுக சார்பில் பங்கேற்று வருகிறார்.
தாராபுரம் தொகுதி வேட்பாளர் சுகன்யா வழக்கறிஞராக பணியாற்றி வருவதுடன், கட்சியில் ஒன்றிய அணி செயலாளர் பொறுப்பிலும் உள்ளார். தொகுதியில் உள்ளூர் அளவில் தீவிரமாக செயல்பட்டு வருபவராகவும் குறிப்பிடப்படுகிறார்.
பரபரக்கும் தேர்தல் களம்
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் திமுக, தவெக, அதிமுக, நாம் தமிழர் கட்சி என பல்வேறு கட்சிகள் களமிறங்குவதால் போட்டி தீவிரமடைந்துள்ளது. இரு தொகுதிகளிலும் அக்டோபர் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது; அக்டோபர் 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

