சென்னையில் சமீபகாலமாக நடந்த கொலை சம்பவங்களைத் தொடர்ந்து, சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, நகரில் ரவுடிகள் மற்றும் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை கண்காணித்து கைது செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரே இரவில் 70 பேர் கைது
சிறப்பு கண்காணிப்புப் பணியின் அடிப்படையில், சென்னையில் நேற்று இரவு போலீசார் அதிரடி சோதனை மற்றும் கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில் சுமார் 70 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் திருவொற்றியூர் மற்றும் பெசன்ட் நகர் பகுதிகளில் நடைபெற்ற கொலை சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் போலீஸ் பாதுகாப்பும் கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பிடிவாரண்ட் உள்ளவர்களுக்கும் வலை
குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை மட்டுமின்றி, நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து அவர்களுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளவர்களையும் போலீசார் தேடி கைது செய்து வருகின்றனர்.
சென்னையில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் இந்த சிறப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

