நான் யார் என்று கொங்கு மக்களுக்குத் தெரியும்! – புதிய திராவிட கழகத் தலைவர் கே.எஸ்.ராஜ் கவுண்டர் பேட்டி

புதிய திராவிட கழகத் தலைவர் கே.எஸ்.ராஜ் கவுண்டர்

புதிய திராவிட கழகத்தின், வெல்லட்டும் சமூக நீதி – 6 ஆவது மாநில மாநாடு, ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட எழுமாத்தூரில் கடந்த 30.11.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.

இம்மாநாட்டில் தலைமைச் சிறப்பு விருந்தினராக, தமிழகத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்பித்தார். வெற்றிகரமாக நடந்து முடிந்த இம்மாநாடு தற்போது தமிழகம் முழுவதும் பேசு பொருளாக ஆகியுள்ளது.

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

இந்நிலையில், புதிய திராவிட கழக நிறுவனத் தலைவர் கே.எஸ்.ராஜ் கவுண்டரை அழைத்துப் பேசினோம். அப்போது அவர் கூறியதாவது:

எனது சொந்த ஊர், ஈரோடு மாவட்டம் தாமரைப் பாளையம் அருகிலுள்ள கருத்திப் பாளையம் ஆகும். நான் மிகவும் பிற்படுத்தப்பட்ட வேட்டுவ கவுண்டர் இனத்தைச் சேர்ந்தவன். எங்கள் குடும்பம் மூன்று தலைமுறைகளாக அரசியல் பாரம்பரியம் கொண்டது.

எனது தாத்தா செங்கோட கவுண்டர் 1968-இல், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு, சிறைக்குச் சென்று, 48 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தவர். அதனால், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பாராட்டைப் பெற்றவர். மேலும், தி.மு.க. நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்டுள்ளார்.

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

எனது அப்பா 1982-இல், தி.மு.க.வில் இளைஞரணி கிளைச் செயலாளராகவும், ஒன்றியப் பிரதிநிதியாகவும், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி இயக்குநராகவும் பணியாற்றியவர். மேலும், தி.மு.க.வின் அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்டு பலமுறை சிறை சென்றுள்ளார்.

நான் என்னுடைய 21 வயதில் தி.மு.க.வில் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளராக நியமிக்கப்பட்டேன். எனது சகோதரர் ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்தார். இப்படி, என் குடும்பமே தி.மு.க. குடும்பம் தான்.

அதன் பின்னர், நான் படிப்பை முடித்து விட்டு, கடந்த 2013-ஆம் ஆண்டு கொங்கு நாடு வேட்டுவ கவுண்டர் இளைஞர் நலச்சங்கத்தை ஆரம்பித்தேன். சங்கத்தை ஆரம்பித்ததும், தமிழகம் முழுவதும் 5 நாட்கள் பேரணி நடத்தி, கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பேரணியை நிறைவு செய்து, வேட்டுவ கவுண்டர் இனத்தில் உள்ள அனைத்து உட்பிரிவுகளையும் ஒரே பெயரில் கொண்டு வந்து, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டி உண்ணாவிரதம் இருந்தோம்.

அதன் பிறகு, 2014-இல் முதல் மாநாட்டை நடத்தினோம். தொடர்ந்து கொங்கு நாடு வேட்டுவ கவுண்டர் இளைஞர் நலச்சங்கம் மூலம் சமூகப் பணிகளைச் செய்து கொண்டிருந்தோம்.

அதன் பின்னர், கடந்த 2018-ஆம் ஆண்டு, அனைத்து சமுதாயத்தினருக்கும் அரசியல் அங்கீகாரம் கிடைக்க வேண்டி, அந்தச் சமுதாயங்களைச் சேர்ந்த மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, புதிய திராவிட கழகத்தைத் தொடங்கினேன்.

அதைத் தொடர்ந்து, அரசியலில் புறக்கணிக்கப்பட்டுள்ள சமுதாயங்களைச் சேர்ந்த மக்களையும், இயக்கங்களையும், அவற்றின் தலைவர்களையும் சந்தித்து, அவர்களை ஒருங்கிணைத்து, சமூக நீதியை நிலைநாட்டும் வகையில், அவர்கள் அனைவருக்கும் புதிய திராவிட கழகத்தில் பொறுப்புகளையும், பதவிகளையும் வழங்கினேன். இன்று வரை சுமார் 20-க்கும் மேற்பட்ட சமுதாய அமைப்புகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், புதிய திராவிட கழகத்தில் உள்ளனர்.

புதிய திராவிட கழகத்தின் மூலம், இரத்ததான முகாம், மரக்கன்று வழங்குதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு ஆடு, மாடு, கன்றுகள் வழங்குதல் என, பல்வேறு சமூகப் பணிகளைச் செய்து வந்தேன்.

கொங்கு நாடு வேட்டுவ கவுண்டர் இளைஞர் நலச்சங்கத்தைத் தொடங்கியதில் இருந்து இப்போது வரை 6 மாநாடுகளை நடத்தியுள்ளேன். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், புதிய திராவிட கழகம் சார்பாக, தி.மு.க.விற்கு ஆதரவு அளித்தோம். தேர்தலில் வெற்றிக் கனியைப் பறித்த மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், எனக்கு, தமிழ்நாடு அரசு சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர் பதவியை வழங்கினார்.

அதைத் தொடர்ந்து, கொங்கு நாட்டின் சமூகநீதி மாநாட்டை, ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் நடத்தினோம். அதில், 2024 நாடாளுமன்றத் தேர்தலில், 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறத் தீர்மானம் நிறைவேற்றி, நாடாளுமன்றத் தேர்தலிலும் ஆதரவு அளித்தோம்.

தற்போது மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட எழுமாத்தூரில் கடந்த 30.11.2025 அன்று வெல்லட்டும் சமூக நீதி – 6 ஆவது மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்தினோம். மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், தலைமைச் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

அவருடன் மாண்புமிகு வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, முன்னாள் அமைச்சரும், தி.மு.க.வின் மேற்கு மண்டலப் பொறுப்பாளருமான வி.செந்தில் பாலாஜி, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.சி.சந்திரகுமார், ஏ.ஜி.வெங்கடாசலம், மாவட்டச் செயலாளர்கள் தோப்பு என்.டி.வெங்கடாசலம், கே.எஸ்.மூர்த்தி ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாநாடு மாபெரும் வெற்றி பெற்றது.

தமிழ்நாட்டில் தொடர்ந்து தி.மு.க. தான் சமூக நீதியை நிலைநாட்டி வருகிறது. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், பேச்சளவில் இல்லாமல், செயலளவிலும் சமூக நீதியை நிலைநாட்டி வருகிறார். எனவே, அவரது கரத்தை வலுப்படுத்தும் விதமாக, புதிய திராவிட கழகம் ஆதரவு அளித்து வருகிறது என்றார்.

அப்போது அவரிடம், மாநாட்டில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசிய போது, கவுண்டர் என்று பலமுறை சொன்னதாகவும், இது தான் சமூக நீதியா என்றும், பல்வேறு விமர்சனங்கள் எழுகிறதே என்னும் கேள்வியை முன் வைத்தோம்.

அதற்கு அவர், சிரித்துக் கொண்டே, இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில், சமூக இணைய தளங்களின் முன்னேற்றத்தில் யார், யாரை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் காட்ட முடியும், எழுத முடியும், அவதூறு பரப்ப முடியும்.

மாநாட்டின் வெற்றியைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் இம்மாதிரியான விமர்சனங்களை முன் வைக்கிறார்கள். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் என்னுடைய பெயரைத் தான் ராஜ் கவுண்டர் என்று பலமுறை குறிப்பிட்டாரே தவிர, கவுண்டர் என்று சாதியைக் குறிப்பிட்டுப் பேசவில்லை. அதுகூடத் தெரியாமல், புரியாமல், தவறான விமர்சனங்களைச் செய்கின்றனர்.

மேலும், மாநாட்டில் பேரணி நடத்தியதாகப் பதிவுகளை வெளியிட்டுள்ளனர். பேரணி எதுவும் மாநாட்டில் நடத்தப்படவில்லை என்பது, மாநாட்டில் கலந்து கொண்ட அனைவருக்கும் தெரியும். கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட பேரணியின் காணொலிகளைத் தற்போது எடுத்துப் பரப்பி வருகிறார்கள் என்றவரிடம்,

நீங்கள், கவுண்டர் இன மக்களுக்காக மட்டுமே செயல்படுவதாக, உங்கள் மீது, விமர்சனம் வைக்கப்படுகிறதே என்னும் கேள்வியை முன் வைத்தோம்.

அதற்கு அவர், முத்துராமலிங்கத் தேவர், வ.உ.சிதம்பரம் பிள்ளை என்கிறார்கள். அதற்காக அவர்கள் எல்லாம், அந்தச் சமுதாயத்துக்காக மட்டும் தான் பாடுபட்டார்கள் என்று சொல்ல முடியுமா? ஒட்டு மொத்தச் சமுதாய மக்களும் தானே அவர்களைப் போற்றுகிறார்கள்?

முலாயம் சிங் யாதவ், தேஜஸ்வி யாதவ் என்கிறார்கள். அவர்கள், அவர்கள் சார்ந்த சமுதாயத்திற்கு மட்டுமேயான தலைவர்கள் என்றால், அவர்களால் அரசியலில் ஒட்டு மொத்தச் சமூக மக்களின் வாக்குகளையும் பெற்றுப் பதவிகளை அடைந்திருக்க முடியுமா? இதுபோல என்னும் பல எடுத்துக்காட்டுகளைச் சொல்ல முடியும்.

எனவே, யாரும் எனக்கு எதிரானவர்கள் அல்ல. நான் அனைத்துச் சாதி மக்களுக்கும் அரசியல் அங்கிகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, சாதி, மதம், மொழி, இனங்களைக் கடந்து, அனைவருடனும் இணைந்து செயல்பட்டு வருகிறேன். ஆனால், என் பெயரை வைத்து, கவுண்டர் இனத்திற்காக மட்டும் நான் செயல்படுவதாகக் கூறி சிலர் அவதூறு பரப்பி வருகின்றனர். நான் யார் என்று கொங்கு மக்களுக்குத் தெரியும் என்றார்.


மு.உமாபதி

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900
விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

உங்கள் கருத்து?

Related Posts