கேப்டன் விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள்: வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடும் தேமுதிக !!

Captain Vijayakanth Birthday: தேமுதிக நிறுவனத் தலைவரும், மறைந்த நடிகரும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள் இன்று (ஆகஸ்ட் 25) அனுசரிக்கப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.

விஜயகாந்த் தனது பிறந்தநாளை கடந்த 2006-ம் ஆண்டு முதல் ‘வறுமை ஒழிப்பு தினமாக’ கடைப்பிடித்து வந்தார். ஏழை, எளிய மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்ற நோக்கில், அவரது பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் தேமுதிக சார்பில் பல்வேறு பகுதிகளில் இலவச தையல் இயந்திரங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள், மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

கோயம்பேட்டில் சிறப்பு நிகழ்ச்சிகள்

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து விஜயகாந்தின் நினைவிடத்திலும், அவரது சிலைக்கும் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் விஜயகாந்தின் குடும்பத்தினர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவரது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

முதலமைச்சர் விஜய் புகழஞ்சலி

விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில், மனிதநேயம், துணிச்சல் மற்றும் தன்னலமற்ற சேவையின் அடையாளமாக கேப்டன் விஜயகாந்த் விளங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். ஏழை, எளிய மக்களுக்கு அவர் செய்த உதவிகளை நினைவுகூர்ந்த முதலமைச்சர், அவரது புகழ் என்றும் நிலைத்திருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் வாழ்த்து 

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் அவரை நினைவுகூர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் தனது பதிவில், ஏழை மக்களிடம் அளவற்ற அன்பு கொண்டிருந்த தனது அருமை நண்பர் விஜயகாந்த், அவர்களின் நெஞ்சங்களில் என்றும் நீங்காத நினைவாக வாழ்வார் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், விஜயகாந்தின் கனவுகளை நிறைவேற்ற உழைத்து வரும் தேமுதிக தொண்டர்களுக்கும், கட்சியை வழிநடத்தும் பிரேமலதா விஜயகாந்துக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அதேபோல, நடிகர் கமல்ஹாசன், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால் உள்ளிட்ட பல்வேறு திரையுலக மற்றும் அரசியல் பிரமுகர்களும் அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி அவரது நினைவுகூர்ந்தனர்.

திரைத்துறையில் ‘புரட்சிக் கலைஞர்’ என்றும், அரசியலில் ‘கேப்டன்’ என்றும் மக்களால் அழைக்கப்பட்ட விஜயகாந்தின் மக்கள் சேவை மற்றும் கொடையுள்ளம் காரணமாக, அவரது பிறந்தநாள் இன்றும் நலத்திட்டப் பணிகளுடன் நினைவுகூரப்பட்டு வருகிறது.

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900
விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

உங்கள் கருத்து?

Related Posts