I’m Game விமர்சனம்: வித்தியாசமான ஃபேன்டஸி கதை… ஆனால் தடுமாறும் திரைக்கதை!

I’m Game

I’m Game விமர்சனம்: நீண்ட இடைவெளிக்குப் பிறகு துல்கர் சல்மான் மலையாள சினிமாவுக்கு திரும்பியுள்ள படம் ‘ஐம் கேம்’. ‘ஆர்டிஎக்ஸ்’ படத்தை இயக்கிய நஹாஸ் ஹிதாயத் இப்படத்தை இயக்கியுள்ளார். ஃபேன்டஸி மற்றும் ஆக்‌ஷன் கலந்த கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படம், வழக்கமான கதைகளில் இருந்து மாறுபட்ட முயற்சியாக அமைந்துள்ளது.

சூதாட்டத்தில் சிக்கிய டேன்

விளம்பரம்:

கோடீஸ்வர குடும்பத்தைச் சேர்ந்த டேன், தந்தையின் விருப்பப்படி குடும்ப நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார். ஆனால் சூதாட்டப் பழக்கம் காரணமாக பெரும் கடனில் சிக்குகிறார். அதே நேரத்தில் கிரிக்கெட் மீது தீவிர ஆர்வம் கொண்ட விக்கியின் வாழ்க்கையும் கதையில் முக்கிய இடம் பெறுகிறது.

எதிர்பாராத விபத்தைதொடர்ந்து, டேன் மற்றும் விக்கியின் வாழ்க்கையில் வித்தியாசமான சம்பவங்கள் நடக்கின்றன. அந்த நிகழ்வுகள் இருவரையும் எவ்வாறு பாதிக்கின்றன என்பதே படத்தின் மையக் கதை.

விபத்துக்குப் பிறகு விறுவிறுப்பு

விளம்பரம்:

I’m Game படத்தின் தொடக்கப் பகுதி சற்று மெதுவாக நகர்ந்தாலும், விபத்துக்குப் பிறகு கதை வேகம் பெறுகிறது. குறிப்பாக டேனின் கை அவரது கட்டுப்பாட்டை மீறி செயல்படும் காட்சிகள் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகின்றன.

இடைவேளை வரை ஃபேன்டஸி அம்சங்களுடன் கூடிய காட்சிகள் ரசிகர்களின் ஆர்வத்தை தொடர்ந்து தக்கவைக்கின்றன.

இரண்டாம் பாதியில் சறுக்கும் திரைக்கதை

ஆனால் இடைவேளைக்குப் பிறகு படத்தின் வேகம் குறைகிறது. ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட ஃபேன்டஸி உலகம் படிப்படியாக வழக்கமான பழிவாங்கும் கதையாக மாறுவது ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது.

கிரிக்கெட் லீக் சூதாட்டத்தைச் சுற்றி வரும் நீண்ட பின்னணிக் காட்சிகளும் படத்தின் ஓட்டத்தை பாதிக்கிறது.

துல்கரின் நடிப்பு கவனம் ஈர்க்கிறது

டேன் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் தனது நடிப்பால் படத்தை தாங்கிச் செல்கிறார். குறிப்பாக அவரது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டு கை செயல்படும் காட்சிகளில் நடிப்பு குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், சம்யுக்தா மற்றும் கதிர் ஆகியோரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பை வழங்கியுள்ளனர்.

தொழில்நுட்ப அம்சங்களில் பலம்

ஜிம்ஷி காலித்தின் ஒளிப்பதிவு படத்திற்கு காட்சியளவில் பலம் சேர்க்கிறது. அஜயன் சாலிசேரியின் கலை இயக்கமும் படத்தின் ஃபேன்டஸி உலகத்தை உருவாக்க உதவுகிறது. ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசையும் காட்சிகளுக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது

நீளமும் கதையின் தடுமாற்றமும் பின்னடைவு

சூதாட்டத்தின் தீமைகள் குறித்து இன்னும் ஆழமாகக் காட்சிப்படுத்தியிருக்கலாம் என்ற குறையும் உள்ளது. அதேபோல், துல்கர் சல்மான் மற்றும் கயாடு லோஹர் இடையேயான காதல் காட்சிகளிலும் போதிய உணர்வுபூர்வ ஆழம் இல்லை.

மொத்தம் 173 நிமிடங்கள் நீளமுள்ள படம், இரண்டாம் பாதியில் தேவையற்ற நீளத்தால் சோர்வை ஏற்படுத்துகிறது.

சுவாரஸ்யமான முயற்சி… தவறவிட்ட வாய்ப்பு

வித்தியாசமான ஃபேன்டஸி கதைக்கருவை கையில் எடுத்திருந்தாலும், அதை முழுமையாக பயன்படுத்தாமல் வழக்கமான பழிவாங்கும் பாதைக்கு படம் செல்வது அதன் முக்கிய குறையாக பார்க்கப்படுகிறது. துல்கர் சல்மான் – நஹாஸ் ஹிதாயத் கூட்டணியின் முயற்சி கவனம் ஈர்த்தாலும், இன்னும் சிறப்பாக உருவாக்கியிருக்கக்கூடிய வாய்ப்பை ‘ஐம் கேம்’ திரைப்படம் தவறவிட்டது என்றே கூறலாம்.

விளம்பரம்:

விளம்பரம்:

விளம்பரம்:

உங்கள் கருத்து?

Related Posts