திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆவணித் திருவிழா (Tiruchendur Avani Festival ) ஆகஸ்ட் 31-ஆம் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து ‘அரோகரா’ முழக்கத்துடன் கொடியேற்ற நிகழ்வைக் கண்டு வழிபட்டனர்.
அதிகாலை சிறப்பு பூஜைகள்
விழாவை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து விஸ்வரூப தரிசனம் மற்றும் உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து காலை 5.15 மணிக்கு திருவிழா கொடி ஏற்றப்பட்டது.
பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா
விழாவின் அடுத்தடுத்த நாள்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற உள்ளன. செப்டம்பர் 4-ஆம் தேதி சுவாமியும் அம்மனும் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வர உள்ளனர். தொடர்ந்து கோ ரதம், வெள்ளி ரதம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
செப்டம்பர் 9-ல் தேரோட்டம்
ஆவணித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் செப்டம்பர் 9-ஆம் தேதி காலை 7 மணிக்கு நடைபெற உள்ளது. இதையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

