சைபர் குற்றங்கள் மற்றும் ஆன்லைன் மோசடிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், வாட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட தகவல் பரிமாற்ற செயலிகளுக்கு புதிய விதிமுறைகளை மத்திய அரசு கொண்டுவருகிறது.
இதன்படி, செயலிகளில் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணுடன் தொடர்புடைய சிம் கார்டு, அந்தச் செயலியைப் பயன்படுத்தும் சாதனத்தில் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்க வேண்டும். இந்த விதிகள் 2027 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வர உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிம் கார்டு கட்டாயம்
தொலைத்தொடர்புத் துறையின் புதிய வழிகாட்டுதலின்படி, வாட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளில் பயன்படுத்தப்படும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கான சிம் கார்டு, செயலியை இயக்கும் சாதனத்தில் இருக்க வேண்டும். இந்த விதிமுறைகளைச் செயல்படுத்துவதற்கான காலக்கெடு 2026 டிசம்பர் 31 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்த சிம் கார்டை செல்போனில் இருந்து அகற்றினாலோ அல்லது அது செயலிழந்தாலோ, சம்பந்தப்பட்ட செயலிகளைப் பயன்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்படலாம். மீண்டும் சிம் கார்டைச் செயல்படுத்தி பயன்படுத்தும் வரை சேவையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
யாரெல்லாம் பாதிக்கப்படலாம்?
இந்தப் புதிய விதிமுறைகள் குறிப்பாகப் பின்வரும் பயனர்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தக்கூடும்:
பதிவு செய்த சிம் கார்டை ஒரு செல்போனிலும், வாட்ஸ்அப் கணக்கை மற்றொரு சாதனத்திலும் பயன்படுத்துபவர்கள்.
சிம் கார்டு இல்லாமல் வைஃபை வசதியை மட்டும் பயன்படுத்தி மெசேஜிங் செயலிகளை இயக்குபவர்கள்.
அடிக்கடி சிம் கார்டுகளை மாற்றுபவர்கள் அல்லது பதிவு செய்த மொபைல் எண்ணைச் செயலிழக்கச் செய்பவர்கள்.
கணினி மற்றும் பிற சாதனங்கள் மூலம் மெசேஜிங் செயலிகளைப் பயன்படுத்துபவர்கள்.
இருப்பினும், அனைத்து பயனர்களின் கணக்குகளும் குறிப்பிட்ட தேதியில் தானாகவே முடக்கப்படும் என்று இதன் பொருள் அல்ல. விதிமுறைகள் செயல்படுத்தப்படும் விதத்தைப் பொறுத்தே பயனர்களுக்கு ஏற்படும் தாக்கம் அமையும்.
சைபர் மோசடிகளைத் தடுக்க நடவடிக்கை
இந்திய மொபைல் எண்களைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் இருந்தபடி நடத்தப்படும் சைபர் குற்றங்கள், போலி அழைப்புகள், ஃபிஷிங் மோசடிகள் மற்றும் டிஜிட்டல் கைது மோசடிகளைக் கட்டுப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.
பதிவு செய்த சிம் கார்டு இல்லாமலேயே மெசேஜிங் செயலிகளைத் தொடர்ந்து பயன்படுத்தும் வசதியை மோசடி கும்பல்கள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக, மொபைல் எண் மற்றும் செயலிக் கணக்குக்கு இடையிலான தொடர்பை உறுதிப்படுத்த அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.
எந்தெந்த செயலிகளுக்கு இந்த விதிகள் பொருந்தும்?
வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல், ஷேர்சாட், ஜியோசாட், ஜோஷ் மற்றும் அரட்டை உள்ளிட்ட செயலிகள் இந்த விதிமுறைகளின் கீழ் வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் 2026 டிசம்பர் 31-க்குள் தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் பயன்படுத்துபவர்கள் தங்கள் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணும் சிம் கார்டும் தொடர்ந்து செயல்பாட்டில் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது.

