திரையுலக பிரபலங்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் பெயர்களைப் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் போலியான கணக்குகள் தொடங்கப்படுவது தொடர்ந்து வருகிறது.
அந்த வகையில், தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகனும் இயக்குநருமான Jason Sanjay பெயரிலும் போலி சமூக வலைதளக் கணக்குகள் செயல்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.
Jason Sanjay
இதையடுத்து, தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளக் கணக்குகள் எவை என்பதைத் தெளிவுபடுத்தி ஜேசன் சஞ்சய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
என்னுடைய அதிகாரப்பூர்வ கணக்குகள் இவைதான்!
தனது பெயர் மற்றும் புகைப்படத்தைப் பயன்படுத்தி பல்வேறு சமூக வலைதளங்களில் கணக்குகள் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ள ஜேசன் சஞ்சய், தன்னால் நிர்வகிக்கப்படும் அதிகாரப்பூர்வ கணக்குகளின் விவரங்களையும் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, இன்ஸ்டாகிராமில் jason.sanjay_official, ஃபேஸ்புக்கில் Jason Sanjay மற்றும் எக்ஸ் தளத்தில் @official_jsj ஆகிய கணக்குகள் மட்டுமே தன்னுடைய அதிகாரப்பூர்வ கணக்குகள் எனத் தெரிவித்துள்ளார்.
இவற்றைத் தவிர தனது பெயர், புகைப்படம் அல்லது அடையாளத்தைப் பயன்படுத்தி இயங்கும் மற்ற கணக்குகள் அனைத்தும் போலியானவை என்றும் விளக்கமளித்துள்ளார்.
ரசிகர் மன்றம் தொடங்கவில்லை!
மேலும், தனது பெயரில் எந்தவொரு அதிகாரப்பூர்வ ரசிகர் மன்றத்தையும், சங்கத்தையும் அல்லது சமூகக் குழுவையும் தொடங்கவில்லை என ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.
தனது பெயரில் அதிகாரப்பூர்வ ரசிகர் மன்றம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட குழு எனக் கூறிக்கொண்டு செயல்படும் அமைப்புகளுக்கு எந்தவித அனுமதியும் வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அங்கீகரிக்கப்படாத கணக்குகளில் இருந்து வெளியிடப்படும் பதிவுகள், கருத்துகள், தனிப்பட்ட செய்திகள் மற்றும் வணிக ரீதியான தொடர்புகளுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.
இயக்குநராக அறிமுகமான ஜேசன் சஞ்சய்!
இதற்கிடையே, ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமான ‘சிக்மா’ திரைப்படம் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம் ஹெய்ஸ்ட் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியிருந்தது.
இந்நிலையில், தனது பெயரில் போலி கணக்குகள் செயல்படுவதைத் தடுக்க ஜேசன் சஞ்சய் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.

