திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் – 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!
தூத்துக்குடி: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பவுர்ணமி மற்றும் விடுமுறை தினத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய சுமார் 5 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆன்மிகச் சிறப்பு வாய்ந்த தலமாக விளங்குகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
பவுர்ணமியையொட்டி குவிந்த பக்தர்கள்
பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்தனர். அவர்களில் பலர் இரவு நேரத்திலேயே கடற்கரையில் தங்கி தீபம் ஏற்றி நிலவை வழிபட்டனர்.
இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை விடுமுறை மற்றும் பள்ளிகளின் காலாண்டுத் தேர்வு விடுமுறையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் குடும்பத்துடன் பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர்.
5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
அதிகாலை முதலே பக்தர்கள் கடலில் புனித நீராடினர். பின்னர் நாழிக்கிணறு தீர்த்தத்திலும் நீராடிவிட்டு சுவாமி தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
பொது தரிசனத்திற்கும், கட்டண தரிசனத்திற்கும் பக்தர்கள் அதிக அளவில் திரண்டதால் கோவில் வளாகம் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் கூட்டம் அதிகரித்தது. பக்தர்கள் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி
கோவிலுக்கு அதிக அளவில் வாகனங்கள் வந்ததால் திருச்செந்தூர் நகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் உள்ளூர் மக்கள் அவசரத் தேவைகளுக்காக ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களில் வெளியே செல்லவும் சிரமம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தரிசன வரிசை மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளைச் சீரமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

