தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது கட்டுக்குள் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு இதுவரை 17,049 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
தொடர்ந்து குறைந்து வரும் டெங்கு பாதிப்பு
தமிழகத்தில் டெங்கு பாதிப்பு தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக குறைந்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார். 2023-ல் 56,863 பேரும், 2024-ல் 46,971 பேரும், 2025-ல் 25,585 பேரும் டெங்குவால் பாதிக்கப்பட்ட நிலையில், 2026-ல் இதுவரை 17,049 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தீவிர கண்காணிப்பில் சுகாதாரத்துறை
டெங்கு பாதித்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதுடன், உயிரிழப்புகளைத் தடுக்கும் நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார். வீடு வீடாகச் சென்று மழைநீர் தேங்கியுள்ள இடங்களை கண்டறிந்து அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம்
டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் அரசு துறைகளுடன் பொதுமக்களும் இணைந்து செயல்பட வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார். வீடுகளில் மட்டுமின்றி, அருகிலுள்ள காலியிடங்களிலும் மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
காய்ச்சல் இருந்தால் அலட்சியம் வேண்டாம்
காய்ச்சல் தொடர்பான அனைத்து பாதிப்புகளும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், காய்ச்சல் முகாம்கள் மற்றும் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றாலும், காய்ச்சல் ஏற்பட்டால் அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
கொசு ஒழிப்பு நடவடிக்கைகள்
டெங்கு பரவலைத் தடுக்கும் வகையில் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், கொசுக்கடியைத் தடுக்கும் வகையில் உடலில் பயன்படுத்தப்படும் கொசு விரட்டிகளின் செயல்திறன் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
உண்ணி காய்ச்சல் குறித்தும் எச்சரிக்கை
டெங்குவுடன், உண்ணி காய்ச்சல் பாதிப்பும் இந்த ஆண்டு பதிவாகியுள்ளது. 2025-ல் 5,152 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 2026-ல் இதுவரை 4,619 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். புதர் மண்டிய பகுதிகளுக்குச் செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

