தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கம் நாளை முதல் தொடங்க உள்ளது. இதற்கான மாநில அளவிலான தொடக்க நிகழ்ச்சி சென்னை திருவான்மியூரில் நடைபெறுகிறது.
திருவான்மியூரில் உள்ள நடுநிலைப் பள்ளியில் செப்டம்பர் 22ஆம் தேதி காலை 8.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு, விரிவுபடுத்தப்பட்ட காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் பள்ளி வளாகத்தில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவாக்கம்
இதுவரை தொடக்கப்பள்ளி மாணவர்களை மையமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வந்த காலை உணவுத் திட்டம், தற்போது 6, 7 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.
மாணவர்களின் ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்வதுடன், காலை உணவு இல்லாமல் பள்ளிக்கு வரும் நிலையை குறைத்து, கல்வியில் அவர்கள் கவனம் செலுத்துவதற்கு உதவுவதே திட்டத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது.
இந்த விரிவாக்கத்தின் மூலம் கூடுதலாக ஏராளமான மாணவர்கள் பயன்பெற உள்ளனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் மாவட்ட அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வாரத்தில் 5 நாட்களும் மாறுபட்ட உணவு
மாணவர்களுக்கு வாரத்தின் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வகையான காலை உணவு வழங்கப்பட உள்ளது.
திங்கள்கிழமை உப்புமா வகைகளும், செவ்வாய்க்கிழமை காய்கறி கிச்சடியும் வழங்கப்படும். புதன்கிழமை பொங்கல் வகையும், வியாழக்கிழமை மீண்டும் பல்வேறு உப்புமா வகைகளும் இடம்பெறும்.
வெள்ளிக்கிழமை இனிப்பு வகையில் சர்க்கரைப் பொங்கல், ரவா கேசரி அல்லது சேமியா கேசரி போன்ற உணவுகள் வழங்கப்படும். உணவுப் பட்டியலில் சிறுதானியங்கள் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்து சார்ந்த உணவுகளும் இடம்பெறுகின்றன.
செங்கல்பட்டு, திருப்பூர் மாவட்டங்களுக்கு விலக்கு
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.
இதன் காரணமாக இந்த இரண்டு மாவட்டங்கள் தவிர்த்து, பிற பகுதிகளில் செப்டம்பர் 22ஆம் தேதி முதல் விரிவாக்கப்பட்ட காலை உணவுத் திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது.
திட்டத்தை செயல்படுத்தும் பள்ளிகள் மற்றும் சமையல் கூடங்களில் சுகாதாரத்தை உறுதி செய்வதுடன், மாணவர்களுக்கு சூடான, சுவையான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

