டெல்லியில் தசரா விழாவின்போது ராவணன், கும்பகர்ணன், மேகநாதன் ஆகியோரின் உருவ பொம்மைகளுடன் 30 அடி உயர கரப்பான் பூச்சி பொம்மையும் எரிக்கப்பட்ட சம்பவம் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி மாநிலத் தலைவர் சவுரப் பரத்வாஜ் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகக் குற்றம்சாட்டி, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தசரா விழாவில் வித்தியாசமான உருவ பொம்மை
டெல்லியின் பிடாம்புரா பகுதியில் உள்ள ஸ்ரீ கேஷவ் ராம்லீலா கமிட்டி சார்பில் தசரா விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் பாரம்பரியமாக எரிக்கப்படும் ராவணன், கும்பகர்ணன், மேகநாதன் உருவ பொம்மைகளுடன், 30 அடி உயர கரப்பான் பூச்சி பொம்மையையும் எரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த ஏற்பாடு குறித்து விளக்கமளித்த நிகழ்ச்சி குழுத் தலைவரும் பாஜக எம்எல்ஏவுமான அசோக் கோயல், கரப்பான் பூச்சிகள் அசுத்தத்தின் அடையாளமாக இருப்பதால், தூய்மையின் அவசியத்தை மக்களுக்கு உணர்த்தும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். இதற்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை என்றும் அவர் மறுத்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி கடும் எதிர்ப்பு
கரப்பான் பூச்சி உருவ பொம்மையை எரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த சவுரப் பரத்வாஜ், டெல்லி காவல் ஆணையர் மற்றும் துணைநிலை ஆளுநரிடம் புகார் அளித்துள்ளார். இந்த நடவடிக்கை இந்து மத உணர்வுகளைப் புண்படுத்துவதுடன், சமூகங்களுக்கு இடையே பகைமையைத் தூண்டும் வகையில் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். சம்பந்தப்பட்டவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசியல் பின்னணி என்ன?
டெல்லியில் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ என்ற அமைப்பினர், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சூழலில் கரப்பான் பூச்சி உருவ பொம்மை எரிக்கப்பட்டதால், அதன் பின்னணியில் அரசியல் நோக்கம் இருக்கலாம் என்ற விவாதம் எழுந்துள்ளது.
ஆனால், தங்களது நோக்கம் தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இதனால், தசரா விழாவில் இடம்பெற்ற இந்த வித்தியாசமான ஏற்பாடு தற்போது டெல்லி அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையாக மாறியுள்ளது

