தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை அருகே, தமிழ்நாடு கடலோரப் பகுதிகளை ஒட்டியுள்ள கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்த அமைப்பு மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
TN Rain Alert
இதன் தாக்கம் காரணமாக தமிழகத்தின் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடல் பகுதிகளில் சீற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதால், மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, தென்காசி, ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், மதுரை, கோயம்புத்தூர், நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் இதில் அடங்கும்.
தென் மாவட்டங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று, அக்டோபர் 22ஆம் தேதி, விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பித்துள்ளனர்.
இதேபோல், கனமழையை கருத்தில் கொண்டு திருப்பத்தூர் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்களது மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

