Diwali Crackers | தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரயில்களில் பட்டாசுகளை எடுத்துச் செல்லும் பயணிகளுக்கு ரயில்வே போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ரயில்கள் மற்றும் ரயில் நிலைய வளாகங்களில் பட்டாசுகளை எடுத்துச் செல்வது தண்டனைக்குரிய குற்றம் என்பதால், பயணிகள் விதிமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Diwali Crackers Railway Warning To Public
நவம்பர் 8-ம் தேதி தீபாவளி பண்டிகை
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 8-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏராளமானோர் ரயில் பயணங்களை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பண்டிகைக் காலத்தில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், ரயில்வே போலீசார் கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
பட்டாசு எடுத்துச் சென்றால் என்ன தண்டனை?
பட்டாசுகளில் உள்ள வெடிபொருட்கள் மற்றும் ரசாயனக் கலவைகள் காரணமாக, சிறிய தீப்பொறி ஏற்பட்டாலும் பெரிய விபத்து நிகழ வாய்ப்புள்ளது. எனவே, ரயில்களில் பட்டாசுகள் மட்டுமின்றி பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களைக் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே சட்டம், 1989-ன் பிரிவு 164-ன் கீழ், விதிமுறைகளை மீறி ஆபத்தான பொருட்களைக் கொண்டு செல்பவர்களுக்கு அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூ.1,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
தீவிர சோதனையில் ரயில்வே போலீசார்
தீபாவளி காலத்தில் பட்டாசுகளை ரயில்களில் எடுத்துச் செல்வதைத் தடுக்கும் வகையில், ரயில் நிலையங்களில் கண்காணிப்பு மற்றும் சோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. சந்தேகத்திற்குரிய பொருட்களைக் கண்டறிய மோப்ப நாய்களின் உதவியுடனும் சோதனை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
ரயிலில் பட்டாசுகள் அல்லது சந்தேகத்திற்குரிய பொருட்கள் இருப்பதைக் கண்டறிந்தால், பயணிகள் ரயில்வே உதவி எண் 139-ஐத் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம். பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த, பட்டாசுகளை ரயிலில் எடுத்துச் செல்வதை முற்றிலும் தவிர்க்குமாறு ரயில்வே போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

