தமிழ்நாட்டுக்குத் தொழில் முதலீடுகளை ஈர்க்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 7 நாள் பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
அவரை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், தி.மு.க. எம்.பி.,க்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் உடன் சென்று வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். இன்று காலை 9 மணி அளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஸ்டாலின் புறப்பட்டார்.
முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் பேசியதில் சில முக்கிய விவரங்கள்:
- இந்தப் பயணத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், புதியப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
- 2021 ஆம் ஆண்டு தமது அரசு பொறுப்பேற்ற பிறகு, இதுவரை 10.62 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு அந்நிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இதன்மூலம், 32 இலட்சம் பேருக்கு வேலை உறுதி செய்யப்பட்டுள்ளது.
- இந்த வளர்ச்சிக்கு மத்திய அரசு வெளியிடும் புள்ளி விவரங்களே சாட்சி. தமிழ்நாடு அமைதியான, திறமையான இளைஞர்கள் இருக்கக் கூடிய மாநிலம். இதைக் கூறி தான் முதலீடுகளை ஈர்த்து வருகிறேன்.
- ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், ஸ்பெயின், சிங்கப்பூர், அமெரிக்கா ஆகிய 5 நாடுகளுக்குச் சென்று 36 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அவற்றின் மூலம் 18,498 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளன.
- அதன் தொடர்ச்சியாகத் தான் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு இப்போது செல்கிறேன். அங்கு மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்கள் தமிழக மக்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்படும்.
- இந்தப் பயணத்தில் சிறப்பு நிகழ்வாக, செப்டம்பர் 4 ஆம் தேதி ஆக்ஸ்போர்டில் பல்கலைக் கழகத்தில் நடைபெற உள்ள சுயமரியாதைக் கருத்தருங்கில், தந்தைப் பெரியாரின் படத்தை திறந்து வைக்கிறேன்.
இவ்வாறு ஸ்டாலின் பேசிவிட்டுச் சென்றார்.
மு.க.ஸ்டாலின் பயண விவரங்கள்:
- இன்று காலை 9 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்ட ஸ்டாலின், இரவு 9 மணிக்கு ஜெர்மனி சென்றடைகிறார். அங்கு அவருக்கு அயலகத் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.
- நாளை (ஆகஸ்ட் 31) ஜெர்மனியில் முதலீட்டாளர்களைச் சந்திக்கிறார்.
- செப்டம்பர் 1: ஜெர்மனிப் யணத்தை முடித்துக் கொண்டு, இங்கிலாந்துத் தலைநகர் லண்டனுக்கு புறப்படுகிறார்.
- செப்.2: கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக நிகழ்ச்சியில் தொழில்முனைவோரை சந்திக்கிறார்.
- செப்.3: லண்டனில் முதலீட்டாளர்களைச் சந்தித்து தொழில் தொடங்க அழைப்பு விடுக்கிறார்.
- செப்.4, 5, 6: லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் அயலகத் தமிழர் நல வாரியம் நடத்தும் நிகழ்வுகளில் பங்கேற்கிறார். அப்போது அங்கு பெரியாரின் படத்தை திறந்து வைக்கிறார்.
- செப்.7: இங்கிலாந்தில் இருந்து புறப்பட்டு, 8 ஆம் தேதி காலை சென்னையை வந்தடைவார்.
முதலமைச்சருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், தமிழகத் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, முதலமைச்சரின் செயலாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளும் உடன் சென்றுள்ளனர்.
Discover more from செய்தி இதழ்
Subscribe to get the latest posts sent to your email.