முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை நவம்பர் 6ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் மற்றும் பல்வேறு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்ஜாமீன் மனு தள்ளுபடி
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகளைத் தரம் உயர்த்துவதற்கான அனுமதி உள்ளிட்ட அரசு ஒப்புதல்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கும் மேல் முறைகேடாகப் பணம் வசூலிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அன்பில் மகேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, சென்னை அமைந்தகரையில் உள்ள குடியிருப்பில் வைத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அன்பில் மகேஷ்
கைது செய்யப்பட்ட அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் மருத்துவப் பரிசோதனைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பரிசோதனை முடிந்ததும், ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது. அன்பில் மகேஷுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று அவரது தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், அவரை நவம்பர் 6ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது. இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

