அமெரிக்காவுடன் மீண்டும் போர் ஏற்பட்டால், முந்தைய மோதலைவிட இந்தப் போர் நீண்டகாலம் நீடிக்கும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், போர் எப்போது முடிவடைய வேண்டும் என்பதை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீர்மானிக்க முடியாது என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கு ஈரான் நேரடி எச்சரிக்கை
ஈரான் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் முகமது அக்ரமினியா, அந்நாட்டு அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அப்போது அவர் கூறுகையில், அமெரிக்காவுடன் எதிர்காலத்தில் மீண்டும் போர் ஏற்பட்டால், அது முந்தைய போரை விட நீண்டகாலம் நீடிக்கக்கூடும். அந்தப் போர் எப்போது முடிவடைய வேண்டும், எந்த நிபந்தனைகளின் அடிப்படையில் முடிவடைய வேண்டும் என்பதை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீர்மானிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி
இதற்கிடையே, ஈரான் பாதுகாப்பு அமைச்சர் மெஹர்தாத் அக்லாகியும் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் மீது எந்தவொரு தாக்குதல் நடத்தப்பட்டாலும், அதற்கு இணையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய உறுதியான பதிலடி கொடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஈரானுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நாடுகள், ஈரானின் தற்காப்பு நடவடிக்கைகளின் அளவையும் அதன் விளைவுகளையும் தீர்மானிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
புவியியல் எல்லைகள் இல்லாமல் தாக்குதல் நடத்துவோம்
ஈரானின் புரட்சிகர காவல்படையின் செய்தித் தொடர்பாளர் ஹுசைன் மொஹேப்பியும் அமெரிக்காவுக்கு எதிரான தனது நாட்டின் ராணுவ நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடனான மோதலில் புவியியல் எல்லைகள் எதுவும் தங்களுக்கு தடையாக இருக்காது என்றும், எதிரிகளுக்கு அதிகபட்ச பாதிப்பை ஏற்படுத்துவதற்கான விரிவான தாக்குதல் களம் வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், ஈரானின் புதிய உச்ச தலைவர் அயதுல்லா மொஜ்தபா கமேனியின் உத்தரவுகளின் அடிப்படையில் எதிர்கால மோதல்களை எதிர்கொள்ள ராணுவம் தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் கூறியது என்ன?
இதற்கிடையே, ஈரானின் ராணுவத் திறன்களை அமெரிக்கா பெருமளவில் அழித்துவிட்டதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், ஈரானின் அணுசக்தி தொடர்பான இலக்குகள் பெருமளவில் முடக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்கா – ஈரான் இடையே மீண்டும் ராணுவ மோதல் ஏற்படுமா என்ற பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரானின் இந்த எச்சரிக்கை சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.

