ஜி.கே.ஆர். சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில், நோவா ஆம்ஸ்ட்ராங் இயக்கத்தில், தருண் விஜய், சேஷ்விதா கனிமொழி, மதுசூதனன் ராவ், பிரியதர்ஷினி ராஜ்குமார், மற்றும் ராம்ஸ் நடிப்பில் வெளியாகியுள்ளது, குற்றம் புதிது (Kutram Pudithu) திரைப்படம். ஒரு மணிநேரம் 57 நிமிடம் ஓடும் இப்படம், கிரைம் திரில்லர் வகையைச் சேர்ந்தது.
படத்தின் கதை, ஒருநாள் காவல்துறை உதவி ஆணையர் மதுசூதனன்ராவின் மகள் சேஷ்விதா கனிமொழி திடீரென இரவில் கடத்தப்பட்டு, கொல்லப்படுகிறார். உணவு விநியோகம் செய்யும் தருண் விஜய் மீது சந்தேகம் எழுகிறது. பின்னர், ஆட்டோ ஓட்டுநர் ராம்ஸ்தான் உண்மையான கொலையாளி என்று தருண் விஜய் விடுவிக்கப்படுகிறார்.
அதன்பிறகு நான்தான் கொலையாளி, மேலும் இரண்டு கொலைகளைச் செய்துள்ளேன் என்று தருண் விஜய் சரணடைகிறார். அவரை மனநலம் பாதிக்கப்பட்டவராகக் கருதும் தருணத்தில், சேஷ்விதா உயிருடன் மீட்கப்படுகிறார். நடப்பதென்ன? தருண் விஜய் நல்லவரா, கெட்டவரா போன்ற கேள்விகளுடன் படம் நகர்கிறது.
மதுசூதனன் ராவ், மகளின் கொலைக்கான காரணத்தைத் தேடும் தந்தையாகவும், காவல் துறை அதிகாரியாகவும் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். சேஷ்விதா கனிமொழியின் உடல்மொழியும், நடிப்பும் படத்திற்கு பலம் சேர்க்கிறது. இடைவேளைக்கு முன்பு பாசமான மகளாகவும், கிளைமாக்ஸில் மற்றொரு பரிமாணத்திலும் அசத்துகிறார் சேஷ்விதா. அப்புவுடன் மகள் வரும் பாடலிலும், காதல் காட்சிகளிலும் அவர் அழகாகத் தெரிகிறார்.
புதுமுக நடிகர் தருண் விஜயின் அப்பாவி முகமும், வசன உச்சரிப்பும் அருமை. முதலில் மனநலம் பாதிக்கப்பட்டவராகவும் இறுதியில் வேறு முகத்தை வெளிப்படுத்துவதும் படத்திற்கு வலு சேர்க்கிறது. சரணடையும்போது அவர் சொல்லும் கொலைக் கதைகளும், நீதிமன்ற வசனங்களும், கிளைமாக்ஸ் காட்சிகளும் இயக்குநரின் திறமையைக் காட்டுகின்றன.
வில்லனாக வரும் ராம்ஸ், குறைந்தக் காட்சிகளிலேயே மிரட்டி இருக்கிறார். நிழல்கள் ரவி, பிரியதர்ஷினி ராஜ்குமார் ஆகியோர் அப்பா, அம்மாவாக பாசத்தை வெளிப்படுத்தியுள்ளனர். காவல் துறையினரும், குறிப்பாகப் பெண் காவலர்களும் ஸ்மார்ட்டாகத் தோன்றுகின்றனர்.
ஒளிப்பதிவாளர் ஜேசன் வில்லியம்ஸ் காவல்துறை விசாரணைக் காட்சிகளிலும், கொலை நடந்த அறையைப் படம் பிடித்ததிலும் தனது திறமையை அருமையாக வெளிப்படுத்தியுள்ளார். இசையமைப்பாளர் கரண் பி கிருபா, அப்பா-மகள் பாசப் பாடலை அழகாக அமைத்துள்ளார்.
படத்தில் முதல் பாதி பரபரப்பாக நகர்கிறது. நாயகனின் தோற்றமும், செயல்களும் ஏதோ சொல்ல வருவது போன்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றன. கடைசி அரைமணி நேரம் படத்தின் வகையை மாற்றி, பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது ’குற்றம் புதிது’.
இருப்பினும், திகில் படங்களுக்குரிய முழுமையான திருப்தி கிளைமாக்ஸில் இல்லை. இவ்வளவு காவல்துறை, தொழில்நுட்பம், சிசிடிவி கேமராக்கள் இருந்தும் குற்றங்கள் இவ்வளவு எளிதாக நடக்குமா என்ற கேள்விக்குப் படத்தில் விடை இல்லை. இருப்பினும், வித்தியாசமான சஸ்பென்ஸ் திரில்லர் கதைக் களத்திற்காகவும், புதுமையான குற்றப் பின்னணிக்காகவும் ‘குற்றம் புதிது’ படத்தை ஒருமுறைப் பார்க்கலாம்.
Discover more from செய்தி இதழ்
Subscribe to get the latest posts sent to your email.