உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900

2026 தேர்தலில் தாக்கம் தருவாரா விஜய்? கணக்கு இவ்வளவுதான்!

விஜய்

மிழக சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஊர் ஊராகப் பிரச்சாரம் செய்து வருகிறார். தி.மு.க. இன்னும் பிரச்சாரத்தையே தொடங்கவில்லை. என்றாலும், தற்போது வரை, தி.மு.க. தலைமையிலான கூட்டணி வலுவிழக்காமல் தான் உள்ளது. அ.தி.மு.க. அணியிலோ, ஒவ்வொரு தேர்தலிலும் வெவ்வேறுக் கட்சிகள் என்ற நிலைமைதான் இப்போதும். அதனால் அந்த கூட்டணி எவ்வாறு அமையும் என்பது பெரும் எதிர்பார்ப்பே..! இதற்கிடையே விஜய்யின் த.வெ.க., ஒருபுறம்!

உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900

இப்படி, பரபரக்கும் அரசியல் களத்தில் யார்-யாருடன் கூட்டணி  சேரப் போகிறார்கள்? எப்படி இருக்கப் போகிறது தேர்தல் களம்? விஜய்யின் தாக்கம் எந்தளவிற்கு இருக்கும்? இவற்றுக்கான ஒரு சிறியக் கணக்கே இந்த செய்தித் தொகுப்பு!

எப்படி இருக்கிறது அ.தி.மு.க.?

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலும், விக்கிரவாண்டி, ஈரோடுக் கிழக்குத் தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல்களுமே அ.தி.மு.க.,வின் நிலைமைக்கு சாட்சி. காரணம்; தற்போது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாக் காலத்து அ.தி.மு.க. அல்ல.. எடப்பாடி பழனிசாமி தலைமை வகிக்கும் அ.தி.மு.க. அது!

அ.தி.மு.க.,வில் இருந்த சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர் செல்வம் என்று ஆளுக்கு ஒருபுறம் என்று சிதறிவிட்டார்கள். இதுவே கடந்த தேர்தல்களில் அக்கட்சியின் பின்னடைவுகளுக்குக் காரணம்!

இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தல் நெருங்குகிறது. எடப்பாடி பழனிசாமியோ தொண்டை வலிக்க, தினம்தினம் ஒவ்வொரு ஊர்களிலும் பேசி வருகிறார்.

விஜய்யும் இரசிகர் (தொண்டர்) கூட்டங்களும்!

ஆளும் மற்றும் ஆண்டக் கட்சிகளின் நிலைமையே இவ்வாறு இருக்கிறது என்றால், புதிதாக முளைத்திருக்கும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், விழுப்புரம், மதுரை என்று இரண்டு இடங்களில் மாநாடுகளை நடத்தி, தமிழகத்தைப் பிரமிக்க வைத்துள்ளது.

விஜய், நடிகராக இருந்தக் காலத்தில் இருந்தே இதே கூட்டம்தான் சேரும், அவரது ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சி முதற்கொண்டு. அந்தக் காலங்களில் விஜய்யை இரசிகர்கள் நேரில் காண்பதே, குதிரைக் கொம்பாக இருந்தது. அதனால் கிடைத்த சந்தர்ப்பங்களில் பெருங்கூட்டம் சேர்ந்தது.

இப்போது அரசியலுக்கு வந்துள்ளார். இரண்டே மாநாடுகளைப் போட்டுள்ளார். அதனால், தலைவனை நேரில் பார்த்துவிட மாட்டோமா என்றுக் கூட்டம் சேரத்தான் செய்யும். அதன்படி விழுப்புரம் கூட்டத்தில் கட்டுக்கடங்காதக் கூட்டம் சேர்ந்தது. மதுரையில் அந்தளவிற்கு இல்லை. 

சுருக்கமாகச் சொன்னால், விஜய்யின் திரைப் படங்களுக்கு விற்பனையான சினிமா டிக்கெட்டுகள் அல்ல தேர்தல் ஓட்டுகள்!

ஒருவேளை இரசிகர்களெல்லாம் வாக்காளர்களாக மாறிவிட மாட்டார்களா என்றால், அ.தி.மு.க., தி.மு.க., உள்பட எல்லாக் கட்சிகளிலும் விஜய்க்கு இரசிகள் உண்டு.

ஏன்? இந்தச் செய்தியைப் படிக்கும் நீங்கள்கூட விஜய் படத்தைப் போட்டிப் போட்டு பார்த்திருப்பீர்கள். விஜய் நேரில் வருகிறார் என்றால், நீங்களும் முண்டியடித்துப் பார்க்க ஆவல் கொண்டிருந்து இருப்பீர்கள். ஆனால் உங்கள் ஓட்டு யாருக்கு என்பதை நீங்கள்தானே அறிவீர்கள். அவ்வளவுதான் விஜய்யின் கணக்கு!

தமிழக அரசியலின் எதார்த்தம்!

தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலையை உற்றுப் பாருங்கள். இதுவரை அ.தி.மு.க., தி.மு.க. அணிகளை மையப்படுத்தி தான் ஒவ்வொரு தேர்தல்களும் நடந்துள்ளன. மூன்றாவது, நான்காவது அணிகள் உருவாகியக் காலங்களும் உண்டு. ஆனால் அப்போது அந்த அணிகளின் நிலைமை; வாக்கு சதவீதத்தை வேண்டுமானால் பிரிக்க முடிந்ததேத் தவிர, டெபாசிட் இழந்தக் கதைகளையெல்லாம் மறந்துவிட முடியாது.

விஜய்யின் அரசியல் தோற்றத்தை எம்.ஜி.ஆர்., விஜயகாந்தோடு ஒப்பீடு செய்ய, இதுவொன்றும் அவர்கள் வாழ்ந்தக் காலம் இல்லை. மக்கள், ஆண்ட்ராய்டு – ஸ்மார்ட்ஃபோன் காலத்தில் இருக்கிறார்கள். இந்த 21 ஆம் நூற்றாண்டில், எல்லாவற்றையும் பிரித்தறியும் தன்மைக் கடைக்கோடி மனிதனுக்கும் வந்துவிட்டது.

அதற்காக விஜய்யால் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்ல வருகிறீர்களா என்ற உங்கள் கேள்வி புரிகிறது.

சரிதான்! விஜய்யால் ஒன்றுமே செய்ய முடியாது என்று கூறிவிட முடியாது. அதற்காக தமிழக வெற்றிக் கழகத்தினர், மார்த்தட்டிக் கொள்வது போல, முதல் தேர்தலிலேயே ஆட்சியைப் பிடிப்பது; கூட்டணி ஆட்சியை நிறுவது என்பதெல்லாம் மாயை என்று விஜய்க்கே நன்குத் தெரிந்திருக்கக் கூடும்.

மூன்றாவது அணி!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அ.தி.மு.க. அல்லது தி.மு.க., இவ்விரண்டில் ஏதோ ஒரு அணியில் சேர்ந்தால், விஜய்யின் கூட்டணி ஆட்சிக் கனவு ஒருவேளை நனவாகலாம். அதற்கும், அந்த அணிகளைத் தலைமை தாங்கும் கட்சிகள் முன்வர வேண்டும்.

தி.மு.க.-வை அரசியல் எதிரி என்று கூறிவிட்டார் விஜய். பா.ஜ.க.,வைச் சித்தாந்த எதிரி என்கிறார். அப்படியென்றால் அ.தி.மு.க. பக்கமும் சாய முடியாது; அ.தி.மு.க. அணியிலோ பாரதிய ஜனதா அங்கம் வகிக்கிறது.

களம் இப்படியிருக்கும்போது மூன்றாவது அணியை உருவாக்குவது மட்டுமே சாத்தியம். அதில், நாம் தமிழர் இணையப் போவதில்லை. நாங்கள் தனித்தே போட்டி என்று இந்த முறையும் சீமான் உறுதியாக நிற்கிறார். எஞ்சியக் கட்சிகள் என்றால், தே.மு.தி.க., பா.ம.க. மற்றும் இதரக் கட்சிகளைக் கொண்டுக் கணக்குப் போட்டால் கூட மூன்றாவது அணி, ஒரு தொகுதியிலாவது வெல்லுமா என்பதற்கும் கடந்த காலங்களே சாட்சி.

விஜய்யால் என்ன முடியும்?

விஜய்யால் ஒன்று மட்டும் முடியும்! விஜயகாந்த் அரசியலில் காலடி வைத்து, 2006 ஆம் ஆண்டு, முதல் தேர்தலில் எப்படி வாக்குகளைப் பிரித்தாரோ, அதை 2026இல் விஜய்யால் செய்ய முடியும்!

விஜய்க் கட்சிக்கு இது முதல் தேர்தல். இதில் தான் அவரது பலம் என்ன என்பதை நாம் அறிய முடியும். அவரது கட்சியில் விஜயைத் தவிர, வேறு எத்தனைப் பேரை உங்களுக்கு முகம் தெரியும்? முதலில் உங்கள் தொகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் பிரமுகர் யார் என்று சொல்லுங்கள்? இதுதான், த.வெ.க.,வைப் பொறுத்தவரை கடைக்கோடித் தமிழனுக்கும் உள்ள நிலைமை.

மதுரை மாநாட்டில் விஜய் என்ன கூறினார், நினைவிருக்கிறதா?

இப்போது வேட்பாளர்ப் பட்டியலை அறிவிக்கப் போகிறேன் என்று பரபரப்பைக் கொடுத்துவிட்டு, கடைசியில் மதுரை கிழக்குத் தொகுதி வேட்பாளர் விஜய்; தெற்குத் தொகுதி வேட்பாளர் விஜய்; மத்தியத் தொகுதி வேட்பாளர் விஜய் என்று நையாண்டி செய்ததுதான் மிச்சம்!

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் ”த.வெ.க. வேட்பாளர் உங்கள் – விஜய்” என்று, வாக்காளர்களைக் கவர, ஒருத் தலைவன் சொல்லிக் கொள்ளலாமே தவிர, களத்திற்கு செல்லுபடியாகாது தானே?

அப்படிப் பார்த்தால் நமது கணக்குப்படி விஜய்க்கு இருப்பதோ சிதறிய ஓட்டுகளே…

அப்படியென்றால் அடுத்து யார் ஆட்சி?

தி.மு.க. கூட்டணி இதே வலுவுடன் தொடருமானால்; அ.தி.மு.க.,வுடன் த.வெ.க., அணி சேராமல் இருக்குமானால்; தமிழ்நாட்டில் தற்போதைய அரசியல் நிலைமை இப்படியே நீடிக்குமானால், மீண்டும் தி.மு.க. தான் ஆட்சியைப் பிடிக்கும். சந்தேகமே வேண்டாம்!

அதற்காக, பெருவாரியான வெற்றி என்பதெல்லாம் தி.மு.க.,விற்குச் சாத்தியப்படாது. அதேநேரத்தில் வீழ்ந்தாலும் அ.தி.மு.க., த.வெ.க., கரைபடாதக் கட்சிகளாகவே தொடரும்!


– மகேஷ்வர சீதாபதி


Discover more from செய்தி இதழ்

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900

உங்கள் கருத்து?