பொறாமைப்படும் அளவிற்கு ஒளிர்ந்த அ.தி.மு.க. இன்றைக்குப் பலரால் ஏளனம் பேசுகிற அளவுக்கு உள்ளது என்று சசிகலா வேதனை தெரிவித்து இருக்கிறார். எனவே சிதறிக் கிடக்கும் அ.தி.மு.க.,வினர் அனைவரும் ஒன்று பட்டால் மட்டுமே எதிரியை வீழ்த்தி வெற்றிப் பாதையில் பயணிக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அ.தி.மு.க.,வினருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
+ தொண்டர்களுக்கான இயக்கமாகவும் எழை, எளிய மக்களுக்கான இயக்கமாகவும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. சிறப்பாகச் செயலாற்றி வந்துள்ளது. இவற்றிலெல்லாம் எனது தன்னலமற்றப் பங்கும் அடங்கியிருக்கிறது என்று நினைக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.
+ ஆனால் இன்று நிலைமை வேறாக உள்ளது. நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் பார்த்துப் பொறாமைப்படும் அளவுக்கு ஒளிர்ந்த நம் இயக்கம், இன்றைக்கு ஏளனமாகப் பேசும் அளவுக்கு இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.
+ எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரால் அடையாளம் காட்டப்பட்ட நம்மில் சிலர் இன்று பிரிந்துக் கிடக்கிறோம். கட்சியில் இருந்து விலக்கப்பட்டவர்கள், விலகி இருப்பவர்கள் என, அனைவரும் ஒன்றிணைந்து எதிரியை வென்றாக வேண்டியக் காலத்தில் இருக்கிறோம்.
+ மனமாச்சர்யங்களை மறந்து, கருத்து வேறுபாடுகளைக் கடந்து, கட்சி முக்கியம்; கட்சியின் எதிர்காலம் முக்கியம்; கட்சியின் வெற்றி முக்கியம்; அந்த வெற்றி தி.மு.க.,வை வரும் தேர்தலில் வீழ்த்துவதாக அமைவது மிக முக்கியம் என்று நாம் உணர்ந்து செயல்பட வேண்டிய முக்கியத் தருணம் இது.
கழகம் ஒன்றுபட வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறேன். அ.தி.மு.க. தான் எனது ஒரே குடும்பம். எனக்குக் கழகத்தினர் யார் மீதும் எந்தவித கோபமோ வருத்தமோ இல்லை -சசிகலா
+ உங்களில் ஒருத்தியாக, உங்களின் சகோதரியாக இருந்து கழகப் பணியாற்றவே நான் விரும்புகிறேன். 2021 சட்டமன்ற தேர்தலின்போது கூட அ.தி.மு.க. வெற்றிபெற, என்னால் எந்தவித இடையூறும் ஏற்படக் கூடாது என்று எண்ணிதான் ஒதுங்கியிருந்தேன். ஆனால், வெற்றி பெற முடியவில்லை. அதன்பிறகு நடந்த தேர்தல்களிலும் தோல்விதான்.
+ இதை இப்படியே இனியும் வேடிக்கைப் பார்ப்பது இருபெரும் தலைவர்களுக்குச் செய்கின்ற மிகப்பெரிய துரோகம்.
+ ஒன்றுபட்ட, வலிமைமிக்க அ.தி.மு.க.,வைத் தான் தமிழக மக்களும் விரும்புகிறார்கள். கூட்டணிக் கட்சியினரும் விரும்புகின்றனர். அனைவரது விருப்பத்திற்கேற்ப, அனைவரும் ஒன்றிணைந்து அ.தி.மு.க. என்ற அசுர பலத்துடன் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம்!
இவ்வாறு சசிகலா தெரிவித்துள்ளார்.
Discover more from செய்தி இதழ்
Subscribe to get the latest posts sent to your email.