தமிழகத்தில் டிசம்பர் 12 ஆம் தேதி வரை லேசான முதல் மிதமான மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தற்போது அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதிகளில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
அதே நேரத்தில், தெற்கு கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் அண்டை பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன் விளைவாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
நாளை முதல் டிசம்பர் 12 வரை, தமிழகத்தின் பல மாவட்டங்களில் மிதமான மழை தொடரும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. சென்னையிலும் இன்று சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை இருக்கும் வாய்ப்பு உண்டு.
மேலும் பலத்த காற்று வீசும் என்பதால் தென் மாவட்ட கடலோரங்கள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் டிசம்பர் 10 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

