விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் சார்பில் வரும் 16-ஆம் தேதி ஈரோட்டில் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பல இடங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன.
நேற்று, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் அமைப்பு செயலர் செங்கோட்டையன், பவளத்தாம் பாளையத்தில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தை (ஸ்ரீவாரி மண்டபம் அருகில்) ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
“விஜயமங்கலம் டோல்கேட் அருகில் உள்ள 16 ஏக்கர் நிலத்தை பொதுக் கூட்டத்திற்காக கேட்டுள்ளோம். வாகன நிறுத்தத்திற்காக 10 ஏக்கர் நிலத்தையும் கேட்டுள்ளோம். பவளத்தாம் பாளையத்தில் 7 ஏக்கர் இடத்தையும் கோரியுள்ளோம். கூடுதலாக, ஒரு மாற்று இடத்தையும் தேர்வு செய்து போலீசுக்கு கடிதம் வழங்கவுள்ளோம்.”
சில ஊடகங்களில், பவளத்தாம்பாளையம் இடத்தை ஒதுக்க போலீசார் அனுமதி மறுத்துள்ளனர் என்ற தகவல் வெளியானது. இதுகுறித்து விளக்கமளித்த செங்கோட்டையன் கூறினார்:
“அப்படி எந்த மறுப்பும் போலீசார் தெரிவித்ததாக தெரியவில்லை. நாங்கள் போலீசிடம் விசாரித்தபோது, மறுப்பு எதுவும் இல்லை என அவர்கள் கூறினர்.”
மேலும் அவர் தெரிவித்ததாவது:
“பொதுக் கூட்டத்துக்காக மதியம் 12:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை அனுமதி கேட்டுள்ளோம். கூட்டக் கட்டுப்பாடு குறித்து போலீஸ் தரப்பில் எந்தவும் குறிப்புகள் எங்களிடம் இதுவரை வழங்கப்படவில்லை.”

