ஒன்றிய மற்றும் மாநில அரசு அதிகாரங்களை மறுபரிசீலனை செய்து உண்மையான கூட்டாட்சியை வலுப்படுத்தும் எதிர்கால கட்டமைப்பை உருவாக்குவது காலத்தின் கட்டாயம் என்று அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தின் முக்கிய அம்சங்கள்:
- ஒன்றிய–மாநில அதிகாரங்களை மறுபரிசீலனை செய்து, சமநிலையை மீண்டும் நிறுவ வேண்டும். வலுவான ஒன்றியமும், வலுவான மாநிலங்களும் ஒருவருக்கொருவர் துணை நிற்கும் கட்டமைப்பு அவசியம்.
- 1967 இல் இந்தியப் பாதுகாப்புக்கு ஒன்றியம் வலுவாக இருக்கட்டும்; ஆனால் கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் மாநில சுயாட்சியை பறிக்கக் கூடாது என்று அண்ணா கூறினார். 1969 இல் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி, பி.பி. இராஜமன்னார் கமிட்டியை அமைத்து, அது அளித்த அறிக்கை, இந்தியாவில் கூட்டாட்சி குறித்த விவாதங்களை வடிவமைப்பதில் ஒரு மைல்கல்லாக அமைந்தது.
- 1974 இல் தமிழ்நாடு சட்டமன்றம் உண்மையான கூட்டாட்சி வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. பின்னர் சர்க்காரியா கமிஷன் (1983–88) மற்றும் புஞ்சி கமிஷன் (2007–10) ஆய்வு செய்ததால், மாநில சுயாட்சிக்கு போதிய பலன் இல்லை.
- தொடர்ச்சியான அரசியலமைப்புத் திருத்தங்கள், ஒன்றியச் சட்டங்கள், யூனியன் திட்டங்கள் ஆகியவை அதிகாரத்தை ஒன்றியத்தின் பக்கம் சாய்த்து விட்டன. நிதிக் குழு நிபந்தனைகள், மத்திய திட்டங்களின் ஒரே மாதிரி வழிகாட்டுதல்கள், மாநில முன்னுரிமைகளில் தலையீடு செய்கின்றன.
- இன்றைக்கு நாம் ஒன்றிய-மாநில அரசு அதிகாரங்களில் உள்ள இந்த முன்னேற்றங்களை தீர்க்கமாக மறுபரிசீலனை செய்து, கூட்டாட்சியை வலுப்படுத்தும் எதிர்கால கட்டமைப்பை உருவாக்குவதே காலத்தின் தேவை.
- இதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக் குழுவை தமிழக அரசு அமைத்தது. இக்குழுவின் உறுப்பினர்கள்: ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக் வரதன் ஷெட்டி, முன்னாள் திட்டக் குழுத் துணைத் தலைவர் மு. நாகநாதன்.
- இக்குழுவின் பணி செம்மையுற அமைய, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பரிசீலிக்கப்பட்ட கருத்துக்களைப் பெற ஏதுவாக, ஒரு கேள்வித்தாளை இக்குழு தயாரித்துள்ளது. அந்த இணைவழி வினாத்தாளை, கடந்த 23-8-2025 அன்று, ஒன்றிய-மாநில உறவுகள் குறித்த தேசியக் கருத்தரங்கில் வெளியிட்டேன். அதனை https://hlcusr.tn.gov.in/ என்ற இணையதளத்தில் காணலாம்.
- அதில் அனைத்து மாநில முதல்வர்களும், கட்சித் தலைவர்களும் தங்கள் கருத்துகளைப் பகிர வேண்டும். இது கட்சி வேறுபாடுகளைத் தாண்டிய, தேசிய கூட்டாட்சியை வலுப்படுத்தும் முயற்சி. எதிர்கால சந்ததியினருக்கு வலுவான, ஒன்றுபட்ட, உண்மையான கூட்டாட்சி கொண்ட ஒன்றியத்தை வழங்க வேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
Discover more from செய்தி இதழ்
Subscribe to get the latest posts sent to your email.