சென்னை ஐஐடியில், தமிழக அரசுப் பள்ளி மணவர்கள் 28 பேர் சேர்ந்துள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்ததற்கு, பா.ம.க. தலைவர் அன்புமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்த 28 பேரில் யாரும் IIT B.Tech படிப்பில் சேரவில்லை என்று கூறியுள்ளார். 4 மாணவர்கள் மட்டும் JEE Advanced – உயர்நிலைத் தேர்வுக்குத் தகுதி பெற்றவர்கள். மீதமுள்ள 24 பேர் அந்தத் தேர்வுக்கும் தகுதி பெறவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், 25 பேர் B.S – Data Science மற்றும் 3 பேர் B.S – Electronics System என்ற ஆன்லைன் படிப்புகளில்தான் சேர்ந்துள்ளதாக அன்புமணி கூறியுள்ளார். இந்தப் படிப்புகளை IIT-யின் B.Tech படிப்பாக கருத முடியாது என்றும் அன்புமணி தெரிவித்து இருக்கிறார்.
இந்தப் படிப்புக்கு JEE தேவையில்லை. தனி நுழைவுத் தேர்வு மட்டுமே போதுமானது என்றும், 12 ஆம் வகுப்பு அவசியமில்லை; 11 ஆம் வகுப்பு படித்திருந்தாலே போதும் எனவும் குறிப்பிட்டுள்ள அவர், உலகில் எங்கிருந்தாலும் 17 – 81 வயதுக்குள் யார் வேண்டுமானாலும் இதைப் படிக்கலாம். என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தற்போது 36,000-க்கும் மேற்பட்டோர் இந்தப் படிப்பில் சேர்ந்துள்ளதாகவும், அவர்களில் பலர் வேறுக் கல்லூரிகளில் படித்துக் கொண்டே, நிறுவனங்களில் பணி செய்து கொண்டே படிப்பவர்கள் என்றும் அன்புமணி விவரித்துள்ளார்.
இந்தப் படிப்பில் சேர்ந்தவர்களை முழுநேர IIT மாணவர்களைப் போல காட்டி, தி.மு.க. அரசு மக்களை ஏமாற்றுவதாகச் சாடியுள்ள அன்புமணி, இந்தப் படிப்புகள், புதிய தேசியக் கல்விக் கொள்கை (NEP) அடிப்படையில் நடத்தப்படுகின்றன. அதே NEP-ஐ தி.மு.க. கடுமையாக எதிர்த்தது. இப்போது அதே படிப்பை அரசு மாணவர்களுக்குத் திணிக்கிறதா என்றும் வினவியுள்ளார்.
அரசுப் பள்ளி மாணவர்கள் சென்னை IIT-யில் சேர்ந்தனர் என்ற பொய்யான தகவலைப் பரப்புவதை இத்தோடு நிறுத்த வேண்டும். இல்லையெனில் மக்களே வரும் தேர்தலில் தக்கப் பாடம் புகட்டுவார்கள் என்றும் அன்புமணி எச்சரித்து இருக்கிறார்.
Discover more from செய்தி இதழ்
Subscribe to get the latest posts sent to your email.