தமிழ்நாட்டில் இன்றைக்கு மக்களவைத் தேர்தல் நடந்தால்கூட, தி.மு.க. கூட்டணி, மொத்தமுள்ள 39 தொகுதிகளில், 36 இடங்களில் வெல்லும் என்று கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
இந்தியா டுடே நாளிதழ், Mood of Nation என்ற பெயரில் கருத்துக் கணிப்பை நடத்தியது. அதில், ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 14 வரை மொத்தம் 2,06,826 பேரிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.
இதன்மூலம், தமிழ்நாட்டில் ஆளும் தி.மு.க. மீது மக்களிடையே எதிர்ப்புகள் இருந்தாலும், ஆதிக்கம் செலுத்துவது என்னவோ அக்கட்சிதான் என்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, மத்திய அரசை எதிர்க்கும் இந்தித் திணிப்பு விவகாரத்தில், மக்களிடையே தி.மு.க.,விற்கு இன்னும் ஆதரவு இருக்கிறது என்றும் இந்தியா டுடே கூறுகிறது.
என்னதான், அ.தி.மு.க., கூட்டணியில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி இணைந்திருந்தாலும் கூட, அந்த அணி வெறும் மூன்று இடங்களில் மட்டுமே வெல்வதற்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் பெறும் வாக்குகள், தி.மு.க.,வின் எதிரணியில் இருந்து பிரிபவை என்பதால், 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.,விற்கு அது சாதகமாகவே அமையும் -இந்தியா டுடே கருத்துக் கணிப்பு
இதே இந்தியா டுடே, கடந்த பிப்ரவரி மாதம் நடத்தியக் கருத்துக் கணிப்பில், 39 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணியே வெல்லும் என்று தெரிவித்து இருந்தது. ஆனால் அதன்பிறகு தமிழ்நாட்டு அரசியல் களத்தில் எவ்வளவோ மாற்றங்கள் நடந்துவிட்டன.
மேலும் மக்களவைத் தொகுதி அடிப்படையில்தான் இந்தியா டுடே கருத்துக் கணிப்பை நடத்தியிருக்கிறது. சட்டமன்றத் தொகுதி வாரியாக நடத்தினால்தான் இன்னும் ஆழமான தரவுகளைப் பெற முடியும். ஆகவே, தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது; முடிவுகளைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
Discover more from செய்தி இதழ்
Subscribe to get the latest posts sent to your email.