கச்சத்தீவை மீட்பது குறித்து மதுரையில் த.வெ.க. மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியதற்கு இலங்கையில் இருந்து கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.
கச்சத்தீவை விஜய் கேட்டால், தனுஷ்கோடியை நாங்கள் கேட்கலாமா என்று இலங்கைத் தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்புத் தலைவர் என்.வி.சுப்பிரமணியம் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை மாநாட்டில் பேசிய விஜய், தமிழக மீனவர்கள் பிரச்சினைக்குத் தீர்வாக, கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து இந்தியா மீட்க வேண்டும் என்றார். இதற்கு இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் விஜய் ஹேரத்தும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.
விஜய்க்குக் கண்டனம்
இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் என்.வி.சுப்பிரமணியம், கச்சத்தீவை மீட்க முடியாது என்பது தமிழ்நாட்டில் உள்ள மூத்த அரசியல் தலைவர்களுக்கே தெரியும்; அவர்கள் மீனவர்களின் வாக்கு அரசியலுக்காக, கச்சத்தீவைப் பயன்படுத்தி வருகிறார்கள் தவிர, வேறொன்றும் இல்லை என்று கூறினார்.
இலங்கை – இந்தியா இடையேயான கச்சத்தீவுக் குறித்த ஒப்பந்தங்கள் குறித்து, கத்துக்குட்டி அரசியல் வாதி விஜய் தெரிந்துப் பேச வேண்டும் – சுப்பிரமணியம்
இந்தியாவின் நிலங்களைச் சீனா கைப்பற்றுகிறதே… அதற்குத் தீர்வு காணாமல், இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்போம் என்பது வேடிக்கையாக உள்ளது என்றார்.
கச்சத்தீவுகூட, இராமேஸ்வரத்தில் இருந்து 30 மைல் தொலைவில் உள்ளது; ஆனால் தனுஷ்கோடியோ, இலங்கையின் தலைமன்னாரில் இருந்து வெறும் 18 மைல் தொலைவில்தான் இருக்கிறது. எனவே தனுஷ்கோடியை இலங்கை உரிமை கோரலாமா என்று சுப்பிரமணியம் நகைத்தார்.
இந்தியா – இலங்கை மீனவர்ப் பிரச்சினைக்குக் காரணம் கச்சத்தீவு அல்ல, இழுவை மடி மீன்பிடித்தல் முறை மட்டுமே என்று சுப்பிரமணி கூறினார். வேண்டுமானால் தமிழக மீனவர்கள் கச்சத்தீவில் ஒரு பகுதியைப் பயன்படுத்திக் கொள்ள பேச்சுவார்த்தை நடத்தலாமே தவிர, விஜய் கூறுவது போல கச்சத்தீவு மீட்பு என்பது கடும் கண்டனத்துக்குரியது என்றார் இலங்கை சுப்பிரமணி.
Discover more from செய்தி இதழ்
Subscribe to get the latest posts sent to your email.