தந்தைப் பெரியாருக்கு சர்வதேச அளவில் அங்கீகாரத்தை ஏற்படுத்தும் வகையில், இங்கிலாந்தில் உள்ள உலகின் மிகப்பெரிய அறிவுசார் நிறுவனமான, ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில், அவரது திருவுருவப் படத்தைத் தாமே திறந்து வைக்க இருப்பதாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறி உள்ளார்.
சென்னையை அடுத்த நீலாங்கரையில் நடைபெற்ற தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோவின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு பேசியபோது அவர் இதைத் தெரிவித்தார்.
ஜெர்மனி – இங்கிலாந்து நாடுகளுக்கு ஒருவாரப் பயணமாக நாளைப் புறப்படுகிறேன் என்று குறிப்பிட்ட ஸ்டாலின், இந்தப் பயணத்தில் தமிழ்நாட்டுக்கு நிறைய அந்நிய முதலீடுகள் ஈர்க்கப்பட இருப்பதாகக் கூறினார். தமது ஆட்சிக் காலத்தில், இதுவரை 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு முதலீடுகள் தமிழ்நாட்டுக்கு
ஈர்க்கப்பட்டுள்ளன என்றார். இது தமது வெளிநாட்டுப் பயணங்களின் வெற்றியைக் காட்டுவதாக அவர் கூறினார்.
நம்முடைய தமிழ்ச் சமூகத்தை சுயமரியாதையுடன் தலை நிமிர்ந்து நடக்கச் செய்தவர் பெரியார். ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் அவரதுத் திருவுருவப் படம் திறந்து வைக்கப்பட இருக்கிறது. அதை நானே திறந்து வைக்கிறேன் என்பதை நினைக்கும்போது, மகிழ்ச்சிக் கடலில் மிதப்பது போல உள்ளது – ஸ்டாலின்
பெரியார் வலியுறுத்திய சுயமரியாதை, பகுத்தறிவு, பெண் விடுதலை, சமத்துவம் போன்ற கருத்துகள், எல்லைகளைக் கடந்து, உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட அறிவுமேதை உலகளவில் அங்கீகரிக்கப்படுவது, தமிழ்நாட்டிற்கே பெருமை என்று முதல்வர் குறிப்பிட்டார்.
தனது இந்த ஒருவார வெளிநாட்டுப் பயணத்தில் என்னென்ன திட்டமிட்டிருக்கிறோம் என்பதை நாளை புறப்படுவதற்கு முன்பு தெளிவுபடுத்த இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Discover more from செய்தி இதழ்
Subscribe to get the latest posts sent to your email.