தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய 2,152 கோடி ரூபாய் சமக்ர சிக்ஷா அபியான் (SSA) திட்ட நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி, திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில், தனது அலுவலகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம், மழலையர் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை சமமான, தரமான கல்வியை வழங்க மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது. ஆனால் 2024 – 25 ஆம் ஆண்டுக்கான நிதி, பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுவிட்ட நிலையில், எதிர்க்கட்சிகள் ஆளும் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் மாநிலங்களுக்கு மட்டும் இன்னும் வழங்கப்படவில்லை.
இதனால் தமிழகத்தில் 43 இலட்சம் மாணவர்களும், 2.2 இலட்சம் ஆசிரியர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது என்று சசிகாந்த் செந்தில் குற்றம்சாட்டியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழக எம்.பி.,க்கள் பலரும் இதுகுறித்து பிரதமர் மோடியையும் மத்திய கல்வித்துறை அமைச்சரையும் சந்தித்துக் கோரிக்கை வைத்தும் பலன் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தைப் பாரபட்சமாகப் புறக்கணிக்கிறது மத்திய அரசு என்று சாடியுள்ள சசிகாந்த் செந்தில், மாணவர்களுக்கான நிதியைக் கேட்டு நாடாளுமன்றத்திலும் போராடினேன்; கடிதமும் கொடுத்தேன்; சந்திக்க அனுமதிக் கேட்டும் மறுக்கப்பட்டுவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
எனவே காந்திய வழியில் அகிம்சை முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளதாகவும், தமிழக மாணவர்களுக்காக தன் உயிரே போனாலும் பரவாயில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
Discover more from செய்தி இதழ்
Subscribe to get the latest posts sent to your email.