ஆர்.எஸ்.எஸ். – பாரதிய ஜனதா இடையே மோதல் நிலவுவதாக வெளிவந்தத் தகவல்களை, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மறுத்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழா நாடெங்கும் ”ஆர்.எஸ்.எஸ்.-100” என்னும் தலைப்பில் நடந்து வருகிறது. டெல்லியில் நடந்த கருத்தரங்கில் கலந்துகொண்ட மோகன் பகவத், பல்வேறுப் புதிர்களுக்கு விடையளித்துள்ளார். குறிப்பாக, பா.ஜ.க.,வுடன் மோதல் என்ற பல தரப்புக் குற்றச்சாட்டுகளுக்கு அவர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அவர் கூறியதில் முக்கியமானவை:
-
-
ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. இடையே எந்த சண்டையும் இல்லை. சில தரப்புகள் மோதல் போக்கு உள்ளது போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றன.
-
ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.,வின் குறிக்கோள் நாட்டின் நன்மை மட்டுமே. பாரதிய ஜனதா ஆளும் மத்திய மற்றும் மாநில அரசுகளுடன் RSS நல்ல ஒருங்கிணைப்பில் செயல்படுகிறது.
-
பதவியில் இருப்பவர்களுக்குப் பல தடைகள் இருக்கும்; எனவே அவர்கள் செய்ய வேண்டியதை அவர்கள் செய்வார்கள். அதற்கான சுதந்திரத்தை அவர்களுக்கு வழங்கிவிட வேண்டும்.
-
ஒரு அமைப்பு இருக்கிறது என்றால் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்; அதற்காக சண்டை என்று பொருளல்ல.
-
ஆர்.எஸ்.எஸ்.-தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்பது முற்றிலும் தவறு. ஆலோசனை வேண்டுமானால் அளிக்குமே தவிர, முடிவெடுப்பது பா.ஜ.க. அரசாங்கமே.
-
இவ்வாறு மோகன்பகவத் தெளிவுபடுத்தி இருக்கிறார். மேலும் 75 வயது நிறைவடைந்தால் பதவிகளில் இருந்து விலகி விட வேண்டும் என்ற நிர்பந்தத்தை அவர் மறுத்துள்ளார்.
மோடிக்கு தற்போது வயது 74. அவர் பிரதமர் பதவியில் நீடிக்கக் கூடாது என்று கட்டாயம் எழுந்ததாகத் தகவல்கள் வெளியாகின. இதை மறுத்த மோகன் பகவத், தனக்கும் தற்போது வயது 75. அதற்காக பதவியில் நீடிக்கக் கூடாது என்றெல்லாம் இல்லை; அவ்வாறு யாரும் கட்டாயப்படுத்துவது கிடையாது என்றார். ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.,வில் நாட்டிற்கு நன்மை செய்வதற்கு வயதுத் தடையாக இருக்காது என்றும் மோகன் பகவத் தெளிவுபடுத்தினார்.
ஆனால், பா.ஜ.க. மூத்தத் தலைவர் அத்வானி, வயதைக் காரணம் காட்டிதானே ஓரங்கட்டப்பட்டார். இதை யாரும் மறந்துவிட மாட்டார்கள் தானே.
Discover more from செய்தி இதழ்
Subscribe to get the latest posts sent to your email.