அ.தி.மு.க. – பா.ஜ.க.வின் அவதூறு பிரச்சாரத்தைச் சட்டப்படி எதிர்கொள்வேன்!

கே.என்.நேரு

நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு அறிக்கை

னது துறையின் சாதனைகளை மறைத்து, “அதிமுக- பா.ஜ.க” கூட்டணி அமலாக்கத் துறையை ஏவி விட்டு நடத்தும், “நாளொரு புகார் பொழுதொரு அவதூறு பிரச்சாரத்தை” சட்டப்படி  எதிர்கொள்வேன்.

ஒவ்வொரு துறையிலும் திராவிட மாடல் அரசின் சாதனைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சிகளின் வரிசையில் அமலாக்கத் துறையையும் சேர்த்துக் கொண்டு- அதை ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஏவல் துறையாக்கி- நாளொரு புகாரும், பொழுதொரு பிரச்சாரமுமாக என்னைக் குறி வைத்து, தொடர்ந்து அவதூறில் ஈடுபட்டு வருவது மிகுந்த கண்டனத்திற்கு உரியது.

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

கடந்த ஐந்து வருடங்களில் எனது துறையின் கீழ் 24 ஆயிரத்து 752 கிலோ மீட்டர் சாலைகள் போடப்பட்டுள்ளன. கிராமப்புற மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம், ஒரு கோடியே 22 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. இன்னும் 77 இலட்சத்து 28 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு பாதுகாப்புத் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு, பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் என இதுவரை 1762 பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று சமீபத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட கோவை செம்மொழிப் பூங்கா. சென்னை என்றால் தொல்காப்பிய பூங்கா, கோவை என்றால் செம்மொழிப் பூங்கா என்பதோடு, மக்கள் கண்டுகளிக்க- தங்களது பொழுது போக்கிற்காக ஏற்ற பூங்காக்களை திராவிட மாடல் அரசு போல் தமிழ்நாட்டில் அதிமுக அரசும் செய்யவில்லை. மற்ற மாநிலங்களில் உள்ள பா.ஜ.க. ஆளும் அரசுகளும் செய்யவில்லை. அதனால் தான் எனது துறையின் திராவிட மாடல் வளர்ச்சி, எதிர்க்கட்சிகளின் கண்ணை உறுத்துவதை விட அமலாக்கத் துறையின் கண்களையும் உறுத்துகிறது.

பேருந்து நிலையங்கள் என்று எடுத்துக் கொண்டால் இதுவரை 158 பேருந்து நிலையங்கள், மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன. மக்களின் அன்றாடப் பயணத்திற்கு மட்டுமல்ல- அத்தியாவசியப் போக்குவரத்துத் தேவைக்கான அடிப்படை வசதிகளை உருவாக்குவதில் எனது துறை வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைகளைச் செய்திருக்கிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த ஐந்தாண்டுகளில் மாற்றும் அளவிற்கு வெள்ளத் தடுப்புப் பணிகளை மேற்கொண்டிருக்கிறோம். சென்னையில் அதிமுக ஆட்சியில் சாலைகளும்- சப்வேக்களும் ஒரு மழைக்கே வெள்ளக்காடாக காட்சியளித்ததை அனைவரும் அறிவர். ஆனால், இன்று சென்னையில் உள்ள சப்வேக்களில் தண்ணீர் தேங்காத நிலையை உருவாக்கியிருக்கிறோம்.

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

செம்பரம்பாக்கம் என்றாலே அதிமுக ஆட்சிதான் நினைவுக்கு வரும்.  அந்த நிலையை மாற்றி எத்தகைய மழை வெள்ளத்திலும்- எத்தனை முறை செம்பரம்பாக்கத்தில் தண்ணீர் திறந்தாலும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து- இன்னலின்றி மழை வெள்ளத் துயரங்களில் இருந்து சென்னை மக்களைக் காப்பாற்றியிருக்கிறோம். அந்த வகையில் சென்னை மாநகராட்சியில் மட்டும் 1519 கிலோ மீட்டர் தொலைவிற்கு மழைநீர்க் கால்வாய்ப் பணிகளைச் செய்துள்ள அரசு இந்த திராவிட மாடல் அரசு மட்டும் தான்.

இந்தச் சாதனைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாத– சட்டமன்றத் தேர்தலுக்குப் புதிய அவதாரம் எடுத்துள்ள அதிமுக- பா.ஜ.க. கூட்டணிக் கட்சியினரின் தூக்கத்தை இந்த அரசின் சாதனைகள் கலைத்து விட்டன. குறிப்பாக, பா.ஜ.க.வினரை இந்தச் சாதனைகள் ரொம்பவே மிரட்டுகின்றன. ஒன்றிய நிதியை முடக்குகிறோம். ஆளுநரை வைத்து முட்டுக்கட்டைப் போடுகிறோம். ஏஜென்ஸிகளை விட்டுப் பிரச்சாரம் செய்கிறோம். ஆனாலும் சாதனைகள் செய்கிறார்களே என்ற எரிச்சல்.

எனவே, எதைத் தின்றால் பித்தம் தெளியும் எனத் திண்டாடுகிறார்கள். ஆகவே, அமலாக்கத்துறை போன்ற ஏஜென்ஸிகளை ஏவி விடுகிறார்கள். ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்ய வேண்டிய அரசியல் பிரச்சாரத்தை அமலாக்கத் துறையையே வைத்துச் செய்கிறார்கள். தன்னாட்சி மிக்க அமைப்பு என உருவாக்கப்பட்ட அமலாக்கத்துறை, இன்று பா.ஜ.க.வின் துணை அமைப்பாக ஆக்கப்பட்டிருக்கிறது. என் சகோதரர் மீது 2013-ல் வாங்கிய கடனை வைத்துப் போடப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம், “எந்த குற்றமும் நடக்கவில்லை” என ரத்து செய்து விட்டது.

அதன் அடிப்படையில் அமலாக்கத் துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை ஏற்கனவே உயர்நீதி மன்றத்தின் டிவிஷன் பெஞ்சும் ரத்து செய்து விட்டது. ஆனாலும், அமலாக்கத் துறையை மீண்டும் மீண்டும் பிரச்சாரத்தில் ஈடுபடச் சொல்லி, ஒன்றிய பா.ஜ.க. அரசு நிர்பந்திக்கிறது என்றால், அவர்களுக்குப் பயம் நானல்ல! இந்தத் துறை செய்துள்ள சாதனைகள் தான்.

எனது துறைக்குள் எங்கு நுழைந்து பார்த்தாலும்- எங்கும் சாதனை- சாதனை- சாதனை” என்று தான் எதிரொலிக்கும். ஆனால், அதுவே ஒன்றிய பா.ஜ.க. அரசு தூண்டிவிடும் அமலாக்கத் துறையின் கண்களுக்கு ஆதாரமற்ற புகார்களாகத் தெரிகிறது. அப்பட்டமான அரசியல் செய்யத் தூண்டி விடப்படுகிறது. மக்கள் போற்றும் எனது துறையின் சாதனைகளைப் பார்த்து வெதும்புவர்களுக்குப் பதில் சொல்ல முடியாது.

ஆனால் ஒன்று மட்டும் நான் தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். எனது நகராட்சிகள் மற்றும் குடிநீர் வழங்குதல் நிர்வாகத் துறையைப் பொறுத்த மட்டில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மக்களுக்கு வழங்குதல், மழைநீர் வடிகால் பணிகளை நிறைவேற்றுதல், தலைசிறந்த பூங்காக்களை அமைத்தல் ஆகியவையே முதன்மையான பணிகள், முழுமையான சாதனைகள்!

மற்றபடி என் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளை சட்டப்படி எதிர்கொள்வேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் பணியாற்ற வந்துள்ள நாங்கள், ஒன்றிய பா.ஜ.க. அரசின் தூண்டுதலில் அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபடும் அமலாக்கத் துறைக்கோ அல்லது அதிமுக- பா.ஜ.க. கூட்டணியினர் “பொய்யையும், புரட்டையும்” மட்டுமே மூலதனமாக வைத்து ஈடுபடும் அவதூறு பிரச்சாரத்திற்கோ அஞ்ச மாட்டோம்.


மு.உமாபதி


Discover more from செய்தி இதழ்

Subscribe to get the latest posts sent to your email.

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

உங்கள் கருத்து?